என்றும் இளமையாக இருக்கிறீர்களே என்னும் வார்த்தையை மற்றவர்களிடமிருந்து கேட்பது என்பது அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. அதற்கு பின் அவர்களுடைய கட்டுப்பாடும், கடினமான உடல் உழைப்புகளும்தான் அதற்கான காரணம். அப்படி அவர்கள் என்னவெல்லாம் செய்தால் இந்த என்றும் இளமை என்னும் வார்த்தையை கேட்க முடியும்..? தெரிந்துகொள்வோம்...
சிவப்பு இறைச்சிகளை தவிருங்கள் : சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். மருத்துவர் ஆமி சிவப்பு இறைச்சி உட்கொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். ஏனெனில் சிவப்பு இறைச்சி கொழுப்பு நிறைந்த மற்றும் ஆரோக்கியமற்ற ஃபேட்டைக் கொண்டுள்ளது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.
இயற்கை வெளிச்சம் : சூரிய வெளிச்சம் விட்டமின் டி-யின் சிறந்த ஆதாரமாகும். மேலும் இது மன அழுத்தம் மற்றும் மனநிலையை மேம்படுத்தும். எனவேதான் தினமும் சில மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். அதுமட்டுமன்றி விட்டமின் டி குறைபாட்டால் உண்டாகக் கூடிய எலும்பு ஆரோகியத்தையும் சரி செய்ய உதவும். கால்சியம் , பாஸ்பரஸ் போன்ற எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகரிக்க விட்டமின் டி தேவை.
13 மணி நேர ஃபாஸ்டிங் அல்லது இரவு விரதம் : இன்று உடல் எடையை குறைக்க பலருக்கும் கை கொடுப்பது ஃபாஸ்டிங் முறைதான். அந்த வகையில் நீங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க 13 நேர பாஸ்டிங் அல்லது இரவு நேர விரதம் இருப்பது நல்லது. இரவில் சாப்பிட்டாமல் இருப்பதால் உடலானது தன்னை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடும். வயிறு நிறைய சாப்பிட்டால் அதை செரிமானிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். இதனால் மற்ற பழுது பார்க்கும் வேலைகளை செய்ய முடியாமல் நின்று போகும். உடல் பாதிப்புகளையும் தரலாம்.
மன அழுத்தமில்லா வாழ்க்கை : வேலை, குடும்ப வாழ்க்கை மன அழுத்தத்தை தரலாம். இதற்கெல்லாம் நீங்கள் வளைந்துகொடுக்காமல் உங்களை எப்போதும் ஸ்ட்ரெஸ் ஃபிரீயாக வைத்துக்கொள்ளுங்கள். மனதை எப்போதும் அமைதியான நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மன அமைதி தரும் விஷயங்கள் எது என்பதை ஆராய்ந்து அதில் கவனம் செலுத்துங்கள்.