

தூசி, காற்று மாசு, ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ் ஆகும். நமது உடலில் நச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. டீடாக்ஸ் செய்வதால் நச்சுக்கள் நீங்கி சரும பாதிப்பு முதல் புற்றுநோய் பாதிப்பு வரை வராமல் பாதுகாக்கிறது. டீடாக்ஸ் செய்வதால் உடல் எடை குறையும் சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பது அல்லது தீவிர டயட் முறைகளை பின்பற்றுவதால் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடல் எடையை குறைக்கவும் டீடாக்ஸ் முறைகள் குறித்து இங்கு காண்போம்.


இனிப்பில்லாத உணவுகள் : சர்க்கரை, நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு பொதுவான ஆரோக்கியத்தை பாதிக்கும் பொருளாகும். எனவே ஒவ்வொரு பண்டிகை , விசேஷ நாட்களுக்குப் பின்னரும் சர்க்கரையை சில நாட்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவைப் பராமரிக்கவும் உதவும். சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்படுத்தலாம்.


தண்ணீர் குடியுங்கள் : உங்கள் உடலை டீடாக்ஸ் செய்வதில் தண்ணீரை விட எதுவும் சிறப்பாக செயல்பட முடியாது என்றே கூறலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். இது உங்கள் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுவது மட்டுமல்லாமல், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, அடுத்த முறை டீடாக்ஸ் பானமாக பழச்சாறுகளை குடிப்பதற்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த மறக்க வேண்டாம். பழச்சாறுகளில் பெரும்பாலானவற்றில் இனிப்பு சத்துக்கள் இருப்பதால் தண்ணீர் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் போதுமான தண்ணீர் அருந்துவது உங்கள் சருமத்தை அழகாக வைத்து கொள்ள உதவுகிறது.


காய்கறிகள் : வண்ணமயமான காய்கறிகள் ஆரோக்கிய வாழ்விற்கு பெரும் பங்கு வகுக்கிறது. பெரும்பாலான காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நீர் சத்து , நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அன்றாட உணவில் அதிக காய்கறிகளை சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், பசிகளைக் கட்டுப்படுத்தவும், உங்கள் உடல் நச்சுத்தன்மையை இயற்கையாகவே வெளியேற்றவும் உதவும். போதுமான காய்கறிகளை உட்கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் ஏதேனும் இரண்டு காய்கறிகளையாவது அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.


எலுமிச்சை ஜூஸ் : உலகில் பல குளிர்பானங்கள் இருந்தாலும் அதில் பெஸ்ட்டாக இருப்பது எலுமிச்சை ஜூஸ் மட்டும்தான். எலுமிச்சை ஜூஸ் நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதில் புதினா இலைகளை சேர்த்தால் உடலுக்கு மேலும் நல்லது. இந்த எலுமிச்சை ஜூஸை நீங்கள் குறைந்தது 15 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். நீங்கள் விரும்பினால் இந்த ஆரோக்கியமான பழக்கத்தை நீண்ட காலம் எலுமிச்சை கூட தொடரலாம். தினமும் காலையில் வெந்நீரில் எலுமிச்சை சற்று, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.


உடற்பயிற்சி : உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு எவ்வளவு அவசியமான ஒன்றாக இருக்கிறதோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அன்றாடம் வீட்டில் வேலை செய்வது கொழுப்பை எரிக்கவும், தசைகளை பலமாக்கவும் உதவுகிறது, மேலும் எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதால் ஹார்மோன் எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது, இது மனநிலையை சீராக வைத்து, உங்கள் நாளை மகிழ்ச்சியுடன் கடக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிச்சி செய்வது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் துணை புரிகிறது.


இறைச்சிகளை தவிர்த்து ஃபைபர் உணவுகளை சாப்பிடுங்கள் : பெரும்பாலும் விஷேச நாட்களில் நிறைய சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இதனால் உணவு செரிமான உறுப்புகளை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவர ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், புரத சத்தையும் பெற சிவப்பு இறைச்சியை தவிர்க்கவும். ஃபைபர் இயற்கையாகவே நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் வெள்ளரி, கேரட், முளை கட்டிய பயறுகள் மற்றும் அதிக பச்சை இலை காய்கறிகளை சேர்த்து கொள்ளவது ஆரோக்கியமானதாகும்.


போதுமான தூக்கம் அவசியம் : உடல் எடையை குறைக்க தூக்கம் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். போதுமான நேரம் தூங்குவது அடுத்த நாள் உடற்பயிற்சிக்கு உந்துதலாக இருக்க உதவும். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இருப்பதாகவும், அவை உடல் எடையை அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தினம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.