மனித உடல் இயக்கத்தில் கல்லீரலின் செயல்பாடு மிக முக்கியமானது. நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு கல்லீரல் மட்டுமே. நம் உடலுக்குத் தேவையான புரதம், கார்ப்போஹைட்ரேட் ஆகிய சத்துக்களையும், செரிமானத்திற்கு தேவையான பைல் என்னும் திரவத்தையும் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. உணவு மூலமாக கிடைக்கும் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றை சேமிக்கும் நடவடிக்கையை கல்லீரல் தான் செய்கிறது.
மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் மது மற்றும் மருந்துகள் சார்ந்த கழிவுகளை உடைத்து, உடலில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலையை கல்லீரல் செய்கிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதே உங்கள் உடல் நலனை மேம்படுத்துவதற்கு முக்கிய வழிமுறை ஆகும். கல்லீரல் நலன் மற்றும் அதன் செயல்பாட்டுக்கு உகந்த சில உணவுகள் குறித்த பட்டியலை இந்தச் செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
டீ : உங்கள் கல்லீரல் நலனை மேம்படுத்த ஒரு கப் டீ கூட உபயோகமானதாக இருக்கிறது. நிறைய ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துக்கள் டீ-யில் உள்ளன. பிளாக் மற்றும் கிரீன் டீ அருந்தினால், கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அளவுகள் மற்றும் என்ஜைம் அளவுகள் மேம்படும். கிரீன் டீ அருந்துவதால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைவதோடு, கல்லீரலில் சேரும் கெட்ட கொழுப்புகள் குறையும்.
ஓட்ஸ் : காலை வேளையில் உங்களுக்கு மிக சிறந்த உணவாக ஓட்ஸ் இருக்கும். அதே சமயம், ஓட்ஸ் சாப்பிடுவது கல்லீரல் நலனுக்கும் நல்லது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆகியவை இதில் நிறைந்துள்ளன. பாதிக்கப்பட்ட லிவர் செல்களின் இறப்பு வேகத்தை இது கட்டுப்படுத்துகிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்ட தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவையும் இதே பலன்களை கொடுக்க கூடியவை.
பழங்கள் : உங்கள் உடலுக்கு சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் பழங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பழங்களை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் உங்கள் கல்லீரல் நலனுக்கும் உகந்தது. விட்டமின் சி சத்து கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை உட்கொண்டால், உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும்.