உலகிலேயே சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் தான் என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தி அல்ல. அந்த அளவுக்கு முறையற்ற லைஃப் ஸ்டைல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை குழந்தை முதல் முதியவர்கள் வரை பரவியுள்ளது. குழந்தைகளுக்கு கூட நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டைப் 1 டயாபிட்டிஸ் என்று கூறப்படும் வாழ்நாள் முழுவதுமே இன்சுலின் மருந்து அல்லது ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை தற்போது பிறந்த குழந்தைகளுக்கும் காணப்படுகின்றது. இதன் மூலம் சர்க்கரை நோய் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
அடிக்கடி பசி, சிறுநீர் கழிப்பது, தீராத தாகம் இவை அனைத்தும் சர்க்கரை நோயும் கிளாசிக் அறிகுறிகள் என்று கூறப்பட்டாலும் இதை கடந்தும் வேறு சிலர் முக்கியமான அறிகுறிகளை நாம் தவறவிட்டு விடுகிறோம். சர்க்கரை நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்துவிட்டால் அதாவது பார்டர்லைன் என்று கூறப்படும் அளவுக்கு உடலில் ரத்தத்தில் சக்கரை இருக்கும் அளவின் போதே ஒரு சில அறிகுறிகள் இருப்பதை நாம் கண்டறிந்து விட்டால், சர்க்கரை நோய் தீவிரமாக முன்பே எளிதில் சரி செய்து விட முடியும்.
சர்க்கரை நோய் ஆரம்ப அறிகுறிகள் அனைத்துமே சருமத்தில் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். டெர்மா வேர்ல்ட் ஸ்கின் கிளினிக்கின், சரும நிபுணர் மருத்துவர் ரோஹித் பாத்ரா , நீரிழிவு நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும், அதனால் ஏற்படும் சிக்கலை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். நீரிழிவு சரும தொற்று நோய், பூஞ்சை தொற்று, சரும அரிப்பு, விட்டிலிகோ, கொப்புளங்கள், ஃபுட் அல்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்று: 'கேண்டிடா அல்பிகான்ஸ்' என்பது ஒரு வகையான Fungus infection, அதாவது பூஞ்சைத் தொற்று ஆகும். இந்த விதமான தொற்று நீரிழிவு நோயாளிகளிடம் அதிகமாகக் காணப்படும். இந்த சருமத் தொற்று வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். தோல் தொற்று பாதித்த இடங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் தோன்றும், தொடர்ச்சியாக அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும்.
சரும அரிப்பு: பொதுவாக, itching என்று கூறப்படும் அரிப்பு மிக மிக பொதுவான பிரச்சனை தான், பல நேரங்களில் இது ஒரு பிரச்சனை கூட இல்லை; இருந்தாலும், ஆரம்ப கால நீரிழிவு அறிகுறியாக, அரிப்பு மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அதிக அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.