அம்மாக்கள் வீட்டில் உள்ளவர்களின் அக்கறைக்காக மட்டுமே உணவை சமைப்பதும், அவர்களின் ஆரோக்கியத்திலேயே அதிக கவனம் செலுத்துவதுமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய உடல் நலத்தில் அதிகமாக அக்கறை காட்ட மாட்டார்கள். அப்படி அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்யும் உணவை கூட அவர்கள் சாப்பிட மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கே அதை வைத்துவிடுவார்கள். எனவேதான்35- 40 வயதை தொடும் அம்மாக்கள் எலும்பு பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சிவப்பு அணுக்கள் குறைபாடு என பல வகையான நோய்களை சந்திக்கின்றனர்.
இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல உணவு நிறுவனங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிடுகின்றன. சந்தை நோக்கம் ஒருபுறம் இருந்தாலும் அதில் காட்டப்படும் மற்றும் சொல்லப்படும் விஷயங்களில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே இதுவரை கடந்தது கடந்ததாக இருக்கட்டும். இனிமேல் கடக்கவிருக்கும் நாட்களை ஆரோக்கியமாக கொண்டு செல்ல இந்த உணவு வகைளில் தினசரி ஒன்று உட்கொள்வது நல்லது. அவை என்னென்ன பார்க்கலாம்.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் : பச்சை காய்கறிகள் என்றால் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகளையே குறிக்கிறது. அது கீரை , இலை வகைகளாகவும் இருக்கலாம். ஏனெனில் அவற்றில் விட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் சி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சத்துகள் என பல வகையான ஊட்டச்சத்துகளை அவற்றிலிருந்து பெற முடியும். எனவே வாரத்தில் 3 முறையேனும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பச்சை நிற பழங்களை உட்கொள்ளுங்கள்.
தேங்காய் : தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் செரிமானக் கோளாறை சரி செய்யலாம். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். அதோடு உங்களுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
குயினோவா : நார்ச்சத்து நிறைந்த குயினோவா உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலர் சாப்பிடுவார்கள். இதில் அதுமட்டுமல்ல இதய நோய் , இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற அபாயங்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது. குயினோவாவில் இரும்புச் சத்து, தாமிரம், மெக்னீசியம், பாஸொஅரஸ் ஆகியவை இருப்பதால் மெனோபாஸ் அறிகுறிகளை குறைக்கவும் உதவும்.
முழு தானியங்கள் : ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசி என இன்னும் பிற முழு தானிய உணவுகள் கார்போ ஹைட்ரேட் நிறைந்தவை. அதேசமயம் நார்ச்சத்தும் நிறைந்தவை. இவற்றை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. அதேசமயம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். 40 வயதை கடந்த பின் வரும் உடல் பருமன் பிரச்சனையை தவிர்க்கவும் முழு தானிய உணவு உதவும்.
கிரீன் டீ : உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் கிரீன் டீ அவசியம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை வெது வெதுப்பாக குடித்து வாருங்கள். நீங்கள் ஃபிரெஷாக உணர்வீர்கள். 40 வயதுக்கு பின் வரும் மன அழுத்தம் , மனச்சோர்வு, தேவையற்ற மன எண்ணங்களிலிருந்து விடுபட ஒரு கப் கிரீன் டீ குடித்தால் எல்லாம் பறந்து போய் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அதோடு இதுபோன்ற மனநிலை மாற்றங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையே காரணம் அதை சரி செய்யவும் கிரீன் டீ உதவும். நீரிழிவு நோய் இருந்தாலும் கட்டுக்குள் வரும். உடல் பருமன் பற்றியும் கவலை வேண்டாம்.