இந்தியாவில் கடந்த சில நாட்களில் வெப்பத்தின் அளவு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், மக்களுக்கு கோடைகால ஜலதோஷ பிரச்சனையும் தொடங்கியுள்ளது. கோடைகாலத்தில் ஜலதோஷம், கரகரப்பான தொண்டை மற்றும் வயிறு சார்ந்த நோய்த்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வீட்டுமுறை சிகிச்சைகளில் தீர்வு காண முடியும்.
ஆவி பிடித்தல் : மூக்கில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டிருக்கும்போது அதற்கான சிறந்த தீர்வாக ஆவி பிடித்தல் சிகிச்சையை முயற்சிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இருந்து கிளம்பும் ஆவியை சுவாசிக்க வேண்டும். ஆவி வெளியேறிவிடாமல் தடுக்க போர்வை அல்லது துண்டு கொண்டு போர்த்திக் கொண்டு ஆவி பிடிக்கலாம். மூச்சுக் காற்றை மெல்ல, மெல்ல உள்ளே இழுத்து, தம் கட்டி பின்னர் மூச்சை விட வேண்டும். தைல மர எண்ணெய் அல்லது தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை சுடுநீரில் விட்டு ஆவி பிடித்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி டீ குடிக்கலாம் : வீட்டுமுறை சிகிச்சைகள் பலவற்றில் இஞ்சி கட்டாயம் இடம்பிடித்திருக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள், கரகரப்பான தொண்டை மற்றும் தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக இஞ்சி இருக்கிறது. சாதாரண தண்ணீரில் சில துண்டுகள் நறுக்கிய இஞ்சியை போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை அருந்தினால் தொண்டை கரகரப்பு பிரச்சனை முடிவுக்கு வரும். இதனுடன் தேன் சேர்த்தும் பருகலாம்.
வெங்காயம் மற்றும் தேன் : தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வு தரக் கூடியதாக வெங்காயம் இருக்கும். இதேபோன்ற தொண்டை எரிச்சலுக்கு தீர்வு அளிப்பதாக தேன் இருக்கிறது. ஒரு பெரிய வெங்காயம் அல்லது ஒரு சில சின்ன வெங்காயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும். அதனுடன் தேன் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் ஊறிய பின்னர் இதில் சேரும் திரவத்தை எடுத்து குடித்தால் இருமல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.