உலகெங்கிலும் பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய் ஆகும். நம்மை சுற்றியுள்ள உறவுகள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர் என்று பலருக்கு இந்த நோய் இருப்பதால் இது சாதாரணமான ஒன்று என நம் மனதில் அலட்சியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் சர்க்கரை நோய் ஒரு சைலண்ட் கில்லர் ஆகும். நாள்பட்ட சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரக செயலிழப்பு, பார்வைக் கோளாறு பிரச்சினைகள் மற்றும் இதர உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆக, சர்க்கரை நோய் நம்மை தாக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நிபுணர்கள் கூறுவது என்ன? சர்க்கரை நோய் சிகிச்சை குறித்த மூத்த மருத்துவ நிபுணர் பிஎம் மாக்கர் இதுகுறித்து பேசுகையில், “சர்க்கரை நோய்க்கான சில அறிகுறிகள் இயல்பானவையாக தோன்றும். மற்ற சாதாரண அறிகுறிகளுக்கும், இதற்கும் வேறுபாடு உண்டு என்பதை உணர இயலாது. ஆகவே, நம் உடல் வெளிப்படுத்தும் சின்ன, சின்ன அறிகுறிகள் குறித்து கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, நம் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருப்பின் காலை நேரத்தில் எண்ணற்ற அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரிவதில்லை’’ என்று கூறினார். வாய் வறட்சி : சர்க்கரை நோய் தொடர்பாக காலையில் நீங்கள் உணரக் கூடிய முக்கியமான அறிகுறிகளில் ஒன்று வாய் வறட்சி ஆகும். காலையில் எழுந்தவுடன் அதிக தாகம் அல்லது வறட்சியான உணர்வு உங்களுக்கு தோன்றுகிறது என்றால் அது சர்க்கரைக்கான அறிகுறி ஆகும். உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். குமட்டல் : காலையில் உணரக் கூடிய மற்றொரு அறிகுறி குமட்டல் ஆகும். இது சர்க்கரை நோய் மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாகவும் நடக்கலாம். பெரும்பாலான சமயத்தில் குமட்டல் காரணமாக பெரிய அளவுக்கு சிக்கல் ஏற்படாது. அதே சமயம், சர்க்கரை நோய்க்கான இதர அறிகுறிகளுடன் சேர்த்து குமட்டல் பிரச்சினையும் வருகிறபோது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Also Raed : இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கும் குளிர்ச்சியான சூழலை சமாளிப்பது எப்படி..? பார்வை கோளாறு : காலை எழுந்த உடனேயே கண் பார்வை மங்கலாக தெரிகிறது என்றால் நீங்கள் சர்க்கரை நோய்க்கான அபாயத்தை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும் அல்லது ரத்த பரிசோதனை செய்யவும். அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு சீரான உடன் பார்வை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இதர அறிகுறிகள் : மிகுதியான உடல் சோர்வு, பாதங்களில் உணர்வின்மை போன்ற பிரச்சினைகள் அதிகாலையில் வருகிறது என்றால், அவை சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகும். சர்க்கரை நோயை வந்த பிறகு எதிர்கொள்வதை காட்டிலும், வரும் முன் தடுப்பது சிறப்பான வழிமுறை ஆகும். தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்வியல் பழக்கங்கள் போன்றவை அவசியமாகும்.