பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்: மகளிர் நலன் குறித்த மருத்துவ இதழ் ஒன்றில் அண்மையில் கொரோனா பாதிப்பு குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. அதில் உணவை விழுங்குவதில் சிரமம், தலைச்சுற்றல், நெஞ்சு வலி போன்றவை நீண்டகால பாதிப்புகளாக பெண்களுக்கு ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பொருத்தவரையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகத் தான் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், நோய் குணமானதற்கு பிந்தைய அறிகுறிகள் என்பது பாலினம் அடிப்படையில் வேறுபடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண், பெண் எதிர்கொள்ளும் அறிகுறிகளில் உள்ள வேறுபாடுகள்
கொரோனாவால் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவர்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் 84 சதவீத ஆண்களை ஒப்பிடுகையில் 97 சதவீத பெண்களுக்கு அறிகுறிகள் மிக அதிகமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, சுவாசிப்பதில் பிரச்சினை, சோர்வு, இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் தூக்கப் பிரச்சினை போன்றவை பெண்களுக்கு ஏற்படுகின்றன. ஆண்களுக்கு பெரும்பாலும் உடல் எடை குறைகிறது. அதே சமயம், பெண்களுக்கு தூக்கம் பாதிக்கப்படுவதுதான் அடிக்கடி நிகழுகிறது.
பொதுவான அறிகுறிகள்: கொரோனா வைரஸ் ஒரே சமயத்தில் பல உடல் உறுப்புகளை பாதிக்கக் கூடியதாகும். இந்த பாதிப்புகள் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். நீண்ட கால கொரோனா பாதிப்பு யாருக்கு ஏற்படும் அல்லது யாருக்கு ஏற்படாது என்று கணிக்க முடியாது. மயக்கம், மூச்சுக்கோளாறு, இருமல், மூட்டு வலி, நெஞ்சு வலி, ஞாபக மறதி, தூக்கப் பிரச்சினை, தசை வலி, படபடப்பு, நுகரும் திறன் இழப்பு, கவலை, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து 90 நாட்களுக்கு பிறகும் அறிகுறிகள் இருப்பது நீண்டகால பாதிப்பு ஆகும். இந்த அறிகுறிகள் லேசானதாக அல்லது தீவிரமானதாக இருக்கலாம் அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு இருக்கலாம். நீண்ட கால கொரோனா பாதிப்பு குறித்து இன்னும் ஆய்வுகள் தொடருகின்றன என்றாலும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.