60 வயதை எட்டித் தொட காத்திருக்கும் ஆண்களில் சிலருக்கு கோடை கால இரவு நேரங்களில் மாரடைப்பு போன்ற காரணங்களால் மரணம் நிகழ வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோடை இரவுகளில் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் போது, 60-64 வயதுடைய ஆண்களிடையே 3.1 சதவீதம் பேர் இருதய நோயால் இறக்க நேரிடும் என மருத்துவ ரீதியிலான ஆய்வுகளை வெளியிடும் பிரபல BMJ இதழ் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 60-64 மற்றும் 65-69 வயதுக்குட்பட்ட வயதான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாலின அடிப்படையிலான இருதய நோய் இறப்புக்கள் பதிவாவது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் பாலினத்தை அடிப்படையாக கொண்டு 2001ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து படி, "நடுத்தர வயது முதல் முதியவர்கள் வரை பொதுவாக வெப்பத்திற்கு ஆளாகும் போது இரத்த நாளங்களின் அளவு குறைவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், இதன் விளைவாக ஹைபோடென்ஷன், த்ரோம்போசைட்டோசிஸ் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு உட்கார்ந்த படியே நீண்ட நேரம் வேலை செய்தால், சீரான அல்லது சரியான தூக்கமின்மை ஆகியவையும் காரணமாகும். கோடை மேற்பரப்பு காற்றில் வெப்பநிலை ஒழுங்கற்ற முறையில் உயரும் போது பெண்களை விட, ஆண்களே இதய சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
2001 மற்றும் 2015க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் இதயம் தொடர்பான நோய்களால் கிட்டத்தட்ட 40,000 பேர் இறந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்திலிருந்து தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஏனெனில் இந்த மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெப்ப அலைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கார்டியோவாஸ்குலர் எனப்படும் இருதய நோயால் ஒவ்வொரு ஆண்டும் 18 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 17.9 மில்லியன் மக்கள் இருதய நோயால் இறப்பது தெரியவந்துள்ளது. இது ஒட்டுமொத்த இறப்புகளில் 32% ஆகும். கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், ருமேடிக் இதய நோய் மற்றும் பிற இருதய நோய்களும் அடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருதய நோயால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 70 வயதிற்குட்பட்டவர்களில் முன்கூட்டியே நிகழ்கிறது. உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் பருமன், புகையிலை நுகர்வு, மதுப்பழக்கம், அதிக உப்பு உட்கொள்ளல் ஆகியவை இருதய நோய் ஏற்பட பிற காரணிகள் ஆகும்.
இருதய நோய்களின் அறிகுறிகள்: சுவாசிக்க சிரமப்படுதல், மார்பு வலி, இதயத் துடிப்பு மற்றும் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். மாரடைப்பு ஏற்படும் நபர், முகம், கை, கால் அல்லது உடலின் ஒரு பாகம் மட்டும் உணர்விழந்து போவது, தலைசுற்றல், குழப்பம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு, கடுமையான தலைவலி போன்றவற்றை அனுபவிப்பார்கள்.