கொரோனா வைரஸ் காரணமாக இப்போது தொலைதூர வேலை என்பது புதிய நடைமுறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழக்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து எண்ணற்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியிருந்தது. வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறையால் மக்கள் அதீத மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் ஒரு புதிய ஆய்வின்படி அதிக அலுவலக வேலை உயிருக்கே ஆபத்தானதாகிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் வசதியானதாகத் தோன்றலாம். ஆனால் அதன் அமலாக்கத்துடன், நீண்ட வேலை நேரம், கூடுதல் வேலை அழுத்தம், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட கடமைகளை சமப்படுத்த மிகக் குறைந்த நேரம் என இவை அனைத்தும் கடுமையான வேலைக்கு வழிவகுத்துள்ளன.
உண்மையில், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாவது மட்டுமல்லாமல் வேறு சில பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஒரு பெரிய சதவீத ஊழியர்கள் தீவிர உடல்நலப் பிரச்சினைகளையும், சில சந்தர்ப்பங்களில், அதிகநேரம் அலுவலக வேலை செய்வதால் மரணத்தை கூட எதிர்கொண்டுள்ளனர் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் இரவு பகல் பாராது உழைத்து வருபவர்களில் ஒருவராக இருந்தால், இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டியது அவசியம்.
ஊழியர்களிடையே அதிகரித்து வரும் இறப்புக்கள்: உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, அதிகப்படியான வேலை அழுத்தம் மற்றும் நீண்ட வேலை நேரம் காரணமாக சுமார் 194 நாடுகளில் இறப்பு விகிதம் 29% அதிகரித்துள்ளது. அறிக்கைகள் பரிந்துரைத்தபடி, வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்வது சிறந்தது. 40 மணி நேரத்தை கடந்து செய்யும் எந்த ஒரு வேலையும் சுகாதார கேடாக அமையும் என்று கருதப்படுகிறது. சில நேரங்களில், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிக அளவில் சுமைகளை கொடுக்கின்றன.
இது ஒரு யதார்த்தமான சூழ்நிலை என்றாலும் நீண்ட வேலை நேரம் பணியிடத்தில் சீரானதாக மாறினால், அது பெரும் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். அது பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்வது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை 35% அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலுவலகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வேலை அழுத்தம் காரணமாக ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் ஏராளமான ஊழியர்களுக்கு அகால மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
அதிக வேலை காரணமாக ஏற்படும் தீவிர உடல்நலக் கோளாறுகள்: அதிக வேலை செய்யும் போது உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களின் அதிகப்படியான வெளியீட்டால் ஒரு ஊழியர் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிப்பார். இது இதயத்தை நேரடியாக பாதிக்கும். கூடுதலாக, அதிக வேலையுடன், மோசமாக சாப்பிடும் பழக்கம் கொண்ட ஊழியர்கள் குறைவான நேரமே தூங்குகிறார்கள். இதன் காரணமாக உடலை பிட்டாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் இயலாத காரியமாகி விடும். வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க பலர் கட்டுப்பாடில்லாமல் ஆல்கஹால் மற்றும் பிற துஷ்பிரயோக காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
ஊழியர்களிடையே அதிக வேலை செய்யும் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் இது ஒருவரை எதிர்மறையாக பாதிக்காது. ஆனால் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும். இந்த சூழலில் உங்கள் சகாக்கள், மேலாளர்கள் மற்றும் பிற நபர்களிடையே இதுபோன்ற வெளிப்படையான சுகாதார அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு பாசிட்டிவ் மற்றும் மன அழுத்தமில்லாத பணியிடத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமானதாக இருக்கிறது. ஏனெனில் ஊழியர்கள் பொருத்தமாக இருக்காத வரை, ஆரோக்கியமற்ற வேகத்தில் நிறுவனங்கள் வேலை உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.