ஊட்டச்சத்து பெற நம் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. அதிலும், "சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. சமீபத்தில், கொரோனா தொற்று நோய் காணமாக வைட்டமின் டி-யின் முக்கியத்துவம் குறித்து நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். கால்சியம், மக்னீஷியம், பாஸ்பேட் ஆகியவற்றை உடலில் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. உடலில் வைட்டமின்கள் போதிய அளவு இருந்தால் மட்டுமே எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.
வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசை வலி், எலும்பு மற்றும் மூட்டு வலி, எலும்பு முறிதல் போன்ற பிரச்சனை ஏற்படும். இதன் விளைவாக சிலருக்கு ஆஸ்டியோபோரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆர்த்திரிடிஸ் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இந்த வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதுபோன்று வைட்டமின் டி-யின் நன்மைகளில் இன்னொன்றையும் ஒரு சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
அதாவது "வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுப்பவர்களில் மேம்பட்ட புற்றுநோய் உருவாகும் ஆபத்து 38 சதவீதம் குறைகிறது" என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் குறித்து பேசிய ஆய்வின் ஆசிரியரான மருத்துவர் பாலட் சாண்ட்லர், வைட்டமின் டி மேம்பட்ட புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கக்கூடும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
மருத்துவர் பாலட் அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையைச் சேர்ந்தவர் ஆவார். டாக்டர் பாலட்டின் கூற்றுப்படி, வைட்டமின் டி மலிவானது, உடனடியாகக் கிடைக்கிறது மற்றும் பல தசாப்தங்களாக ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக்கான ஆய்வக பரிசோதனைகள் எலிகளில் நடத்தப்பட்டுள்ளன.
எண்ணெய் மீன், சிவப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கருக்கள் மற்றும் காலை உணவு தானியங்கள்,பால், ஓட்மீல், மஷ்ரூம் போன்ற உணவுகளில் வைட்டமின் டி காணப்படுகிறது. எனவே, வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைத்தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், 80 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், வைட்டமின் டி குறைபாட்டிற்கும் நோயின் தீவிரத்திற்கும் எந்த உறவும் இல்லை. ஆனால் வைட்டமின் டி குறைபாடு கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே கொரோனா காரணமாக ஏற்படும் மரண அபாயத்தைக் குறைப்பதற்காக நாட்டில் வைரஸால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதி மக்களுக்கு வைட்டமின் டி விநியோகிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.