தூங்கும்போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதற்கு ஏதேதோ காரணங்கள் இதற்கு முன்பு கூறப்பட்டாலும் இது மிக இயல்பான அளவில் பலரையும் பாதிக்கிறது என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சராசரியாக 5 நபர்களில் ஒருவருக்கு தூக்கத்தில் பல தடங்கல்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. Obstructive Sleep apnea (OSA) - தடைபட்ட தூக்கப் பிரச்சினை என்று இதனை குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் பலத்த ஒலியுடன் குறட்டை வருகிறது. இதனால் இரவில் பலமுறை கண் விழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சுவாசிக்கும் தன்மையும் மாறுபடுகிறது. இவ்வாறு தூக்கம் தடைபடுகின்ற பிரச்சினையை சந்திப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இதய நோய், ஸ்டிரோக், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
எப்படி சமாளிப்பது? தூக்கம் தடைபடுகின்ற பிரச்சினை இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலமாகவும், வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் தீர்வு காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், தடைபட்ட தூக்கப் பிரச்சினை இருப்பவர்களில் மிகக் குறைவான மக்கள்தான் இதுவரையில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 20,151 பேர் ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தூக்கத்தின்போது பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் தங்களுக்கு தூக்கம் தடைபடுவதாகத் தெரிவித்தனர். அடிக்கடி மிகக் கடுமையாக குறட்டை விடுவது மற்றும் பகல் பொழுதில் தூங்கி வழிவது போன்றவை இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உள்ளது.
அபாயம் உண்டா? எப்போதாவது மிகுதியான களைப்பு இருக்கின்ற சமயங்களில் மட்டும் குறட்டை விடுவது இயல்பானதாக கருதப்படுகிறது. ஆனால், மிக அதிகமான ஒலியுடன் எப்போதும் குறட்டை வருகிறது என்றால் அது ஆபத்துக்குரிய விஷயம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முறையாக நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஸ்டிரோக், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்றவற்றை தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பலர் தூக்கத்தில் தங்களுக்கு குறட்டை வருவதே தெரியாமல் இருந்து வருகின்றனர்.