ஒரு பெண் ஸ்லீவ்லெஸ் டிரஸ் அல்லது ஸ்டைலான டாப்ஸை அணிய தேர்ந்தெடுக்கும் போது மெல்லிய ஆர்ம்ஸ் கொண்டிருப்பதே அழகாக இருக்கும். இது போன்ற ஆடைகளுக்கு மெல்லிய ஆர்ம்ஸ் கொண்டிருப்பது ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த தோற்றத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தும். தொளதொளவென தொங்கும் ஆர்ம்ஸையோ அல்லது குண்டான ஆர்ம்ஸையோ யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் பருமனான ஆர்ம்ஸை சரிசெய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தோள்பட்டைக்கு கீழே உள்ள கை பகுதிகளில் குவிந்து இருக்கும் கொழுப்பை விரைவாக குறைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்...
சர்க்கரையை குறைத்து கொள்ளுங்கள் : கூல் ட்ரிங்ஸ் மற்றும் மிட்டாய்களை பார்த்தால் நம் கைகள் வேடிக்கை பார்க்காது. இனிப்பான பானங்கள் மற்றும் தின்பண்டங்களை மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிடுவது இயல்பு. ஆனால் நம் உடலில் அதிக சர்க்கரை சேர்ந்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொளதொளவென தொங்கும் ஆர்ம்ஸ்கள் உருவாக சர்க்கரையும் ஒரு காரணம். எனவே நீங்கள் விரும்பும் வகையிலான ஆர்ம்ஸ்களை பெற சர்க்கரை பொருட்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். எனவே காபி அல்லது டீயில் சர்க்கரையை குறைவாக போட்டு கொள்வது மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்குப் பதிலாக ஃபிரெஷ் ஜூஸ்களை குடிப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்ய வேண்டும்.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள் : ஒரு நாளை சிறப்பாக துவங்க காலை உணவு மிகவும் அவசியம். இரவு முழுவதும் நீண்ட நேரமாக சாப்பிடாமல் இருப்பதால், காலை நேரத்தில் உங்கள் வயிற்றுக்கு உணவு அவசியம் தேவைப்படுகிறது. காலை உணவு உடலுக்கு குளுக்கோஸின் ஊக்கத்தை அளிக்கிறது. ஒரு நாளில் முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
புரத சத்து உணவுகளை சேர்க்கவும் : உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய சத்து புரோட்டீன் தான். புரோட்டீன் நிறைந்த உணவு உங்கள் உடலின் தசைகளை வலுவாக்க உதவும் அதே நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. மேலும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கும். முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் போன்ற புரோட்டீன்கள் உங்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக காலை உணவில் ஒரு முட்டை, இரவு உணவின் போது மீன் இருப்பது சிறந்தது.
ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் : நாம் சாப்பிடும் பெரும்பாலான ஸ்னாக்ஸ்கள் நம் உடலுக்கு தேவைப்படாத சத்துக்களை கொண்டுள்ளன. எனவே ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்களுக்கு பதில் உலர் பழங்கள், பாப்கார்ன் அல்லது முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்தவற்றை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கை பகுதிகளில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க மோசமான ஸ்னாக்ஸ்களை தவிர்ப்பது ஒரு சிறந்த வழி.
பழங்கள் & காய்கறிகள்: உங்கள் அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்க்கின்றன. குளிர் பானங்களுக்கு பதிலாக ஒரு ஃபிரெஷ்ஷான ஜூஸை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உணவில் பழங்களைச் சேர்க்கலாம் அல்லது இரவு உணவிற்கு சாலட் எடுத்து கொள்ளலாம்.