இன்றைய உலகில் நோய்களுக்கா பஞ்சம் என்கிற அளவில் ஏராளமான நோய்கள் உருவாகியவண்ணம் உள்ளன. அவற்றில் சில சாதாரண காய்ச்சல், சளி வகையை சேர்ந்தவையாக இருக்கின்றது. மேலும் சில நோய்கள் உயிரை எடுக்க கூடிய அளவிற்கு பயங்கரமாக உள்ளது. இதில் புற்றுநோயும் அடங்கும். மாறிவரும் வாழ்க்கை சூழல், மோசமான உணவு வகைகள், அதிக மாசுபாடு போன்றவற்றால் புற்றுநோய் உருவாகுகிறது. அந்த வகையில் தோல் புற்றுநோய் பற்றி நம்மில் பலர் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. இது எப்படி உருவாகிறது, இதற்கான அறிகுறிகள் என்னென்ன ஆகியவற்றை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
அறிகுறிகள் : பெரும்பாலும் தோல் புற்றுநோய் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாலே அதன் பாதிப்பு அதிகமாக மாறி விடுகிறது. குறிப்பாக கழுத்து, காது, முகம் ஆகிய பகுதிகளில் தோல் புற்றுநோய் உருவாகிறது. சிறிய கட்டி போன்று ஆரம்பத்தில் தோன்றும். பிறகு நாளைடைவில் பெரிதாகி விடும். இந்த இடங்களில் உருவாகும் கட்டி வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். இந்த வகை புற்றுநோய் சூரிய ஒளிய நேரடியாக படக்கூடிய உடல் பாகங்களில் உருவாகிறது. இது தோல் புற்றுநோயாக இருப்பதால், பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சுகளின் நீண்ட கால தாக்குதல்களால் ஏற்படுகின்றன.
புற்றுநோயின் வெளிப்பாடு : முகம், கழுத்து, காது ஆகிய பகுதிகளில் புற்றுநோய் தோன்றினால் அவற்றை வடிவம், நிறம், வளர்ச்சி ஆகியவற்றை வைத்து அறிந்து கொள்ளலாம். ஒளி ஊடுருவக்கூடிய, வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு கட்டி போன்று தோலில் இருந்தாலோ, கட்டியானது பழுப்பு கருப்பு நிறங்களில் அல்லது பளபளப்பான கருப்பு நிறத்தில் தோன்றினாலே அது தோல் புற்றுநோயாக இருக்கலாம்.
புற்றுநோய் பாதிப்பை குறைப்பது எப்படி : சூரிய ஒளியில் மதிய நேரத்தில் இருக்க வேண்டாம். குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருக்க கூடாது. வைட்டமின் டி உடலுக்கு தேவை என்பதால் இந்த நேரங்களுக்கு முன்பாகவோ, பின்பாகவோ சூரிய ஒளியில் இருந்து கொள்ளலாம். SPF குறைந்தபட்சம் 30 அளவு கொண்ட சன்ஸ்கிரீன் லோஷனை வெயில் காலங்களில் பயன்படுத்தவும். மேலும் வெயிலில் இருக்கும் போது அடர்ந்த நிற ஆடைகளை அணியாதீர்கள். அடிக்கடி உங்கள் தோலை பரிசோதனை செய்து கொள்வது சிறப்பு.
எப்படி பாதுகாப்பது? தோல் புற்றுநோய் உருவாகுவதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. வயது, குடும்ப வரலாறு, ஆர்சனிக் வெளிப்பாடு, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி, மருந்துகள் போன்ற பல விஷயங்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மரபணு மற்றும் வயது தொடர்பான காரணிகள் போன்றினால் உருவாகும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க ஒருவர் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், அடிப்படை செல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க சில பொதுவான விஷயங்கள் உள்ளன. இதற்கு மேற்சொன்னவரை பின்பற்றினாலே போதும்.