பொது கழிவறைகளின் வெஸ்டர்ன் பேஸினில் அமர்ந்தால் சிறுநீர் தொற்று, எஸ்டிஐ போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படக் கூடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். இதனால், முடிந்தவரை பேஸினில் முழுமையாக உட்காருவதை தவிர்த்து, பாதி இடத்தில் அமர்ந்து கடமையை முடித்து விட துடிப்பார்கள். ஆனால், இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவேளை பொது கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உடல் உபாதைகளை கட்டுப்படுத்தி வைத்தீர்கள் என்றால், இன்னும் கூடுதலான சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
மருத்துவர்கள் கூறுவது என்ன..? கழிவறையின் பேஸினில் இருந்து சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், பேஸினில் முறையாக உட்கார வேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைக்கின்றனர். குறிப்பாக, பொது கழிவறை என்றாலும் முறையாக அமர வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. இதுகுறித்து மருத்துவர் தனாயா, இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் , வெஸ்டர்ன் பேஸின் மீது நீங்கள் ஒழுங்காக அமராமல், கால்களில் அழுத்தம் கொடுத்தபடி மேலாக அமருகிறீர்கள் என்றால் உங்களுக்கு ‘பெல்விக் ஆர்கன் ப்ரோலேப்ஸ்’ (சிறுநீர்பை இறக்கம்) ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார் அவர். இதற்கு எடுத்தக்காட்டாக, பேஸ் பலமாக இல்லாத பேஸ்கட் ஒன்றில் இருந்து பழங்கள் எப்படி சரிந்து விழுகின்றன என்ற விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
இதேபோலத் தான், உங்கள் இடுப்பு பகுதி வலுவுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு சிறுநீர் குழாய், கர்ப்பப்பை, ரெக்டம் ஆகுய 3 உறுப்புகளை இது தாங்கிப் பிடித்துள்ளது. பேஸின் மீது நீங்கள் முறையாக அமரவில்லை என்றால், உங்கள் இடுப்பு பகுதி வலுவை இழக்கும். அதுபோன்ற சமயத்தில் மேற்குறிப்பிட்ட 3 உறுப்புகளில் ஏதேனும் ஒன்று கீழே இறங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறார் மருத்துவர் தனாயா.