நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவருமே என்றாவது ஒருநாள் வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்பட்டிருப்போம். சில நேரங்களில் சிறிய புண் தானே தானாக சரியாகிவிடும் என்ற மனநிலையில் இருக்கும் போது நமக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்துவதாக அமைகிறது. குறிப்பாக தொடக்கதில் வாயில் சிறிய கொப்பளங்களாகத் தோன்றும் வாய்ப்புண், நாளடைவில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் பெரிதாவதோடு, குழிப்புண்களாக மாறி வலியை நமக்கு ஏற்படுத்தும்.
இதனையடுத்து தான் நாம் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று நினைப்பதோடு, மருந்தகங்களில் கிடைக்கும் ஏதாவது மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். இனி இது போன்ற நிலைமையை நீங்கள் சந்தித்தால் அனைத்து நேரங்களிலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.. அதற்கு பதிலாக நம்முடைய சமையல் அறைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களை இனி பயன்படுத்த முயல்வோம்.. இதோ என்னென்ன உணவுப்பொருள்கள்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன்னதாக வாய்ப்புண் வருவதற்காக காரணம் என்ன? எனவும் அறிந்து கொள்வோம்.
வாய்ப்புண் வருவதற்கானக் காரணங்கள்:
மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, போன்ற வைட்டமின் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது மற்றும் வீரியம் மிக்கமருந்துகள் மற்றும் மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவைகள் வாய்ப்புண் வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதோ உணவு ஒவ்வாமை உள்பட நீண்ட நாள்கள் சரியான உணவுகளை உட்கொள்ளாததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
வாய்ப்புண்களை குணமாக்கும் எளிய வீட்டு முறை வைத்தியங்கள்:
மஞ்சள் தூள்:
ஒவ்வொருவரின் வீட்டில் உள்ள முக்கிய சமையல் பொருள்களில் ஒன்று தான் மஞ்சள் தூள். இதில் உள்ள ஏராளமான மருத்துவக்குணங்கள் எந்தவொரு காயத்தையும் எந்த நேரத்திலும் குணப்படுத்தக்கூடிய எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது. இது வாய்ப்புண்களையும் எளிதில் ஆற்றவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
மஞ்சள் தூளை சிறிதளவு தண்ணீர் சேர்ந்து கட்டியான பேஸ்ட்டாக கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வாய்ப்புண் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு 3 முறையாவது தடவி விட வேண்டும்.
தேன்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் அனைத்து வீடுகளிலும் இருக்கும் முக்கிய உணவுப்பொருள்களில் ஒன்று தான் தேன். இதில் உள்ள மருத்துவ மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் எந்தவொரு காயங்களையும் உடனடியாக ஆற்றும் திறனை கொண்டுள்ளது. குறிப்பாக புண்களை சரிசெய்வதற்கு தேன் உபயோகிக்கும் போது, அந்த இடத்தில் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள பிற இடங்களிலும் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. எனவே வாய்ப்புண் உள்ளவர்கள் தேனைப் பயன்படுத்தினால் விரைவில் தீர்வு காணலாம்.
பயன்படுத்தும் முறை:
முதலில் சிறிதளவு தேனை எடுத்துக்கொண்டு அதை வாய்ப்புண்களின் மீது தடவ வேண்டும். இதனை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பயன்படுத்தி வந்தால் தீர்வு காணலாம்..
பொதுவாக தேனின் இனிப்பு சுவை காரணமாக வாய்ப்புண்ணிற்கு தேனைப்பயன்படுத்தும் போது உமிழ்நீருடன் சேர்ந்து நாம் உண்ணும் வாய்ப்புகள் ஏற்படும். இதனால் நாம் கவலை கொள்ள தேவையில்லை.
ஆப்பிள் சீடர் வினிகர்:
இதில் உள்ள ஆன்டி- பாக்டீரியல் பண்புகள் எந்தவொரு புண்களையும் வேகமாக குணப்படுத்துவதோடு, வாயில் உள்ள கிருமிகளையும் எதிர்த்துப்போராடுகிறது.
பயன்படுத்தும் முறை:
வாய்ப்புண் உள்ளவர்கள் முதலில் ஒரு சிறிய கப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஆப்பிள் சீடர் கலந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீரால் வாயைக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் செய்துவரும் போது வாய்ப்புண் விரைவில் குணமாகிவிடும்.
தேங்காய் பால்:
வாய்ப்புண்ணினால் அவதிப்படுபவர்கள் தேங்காய் பாலை கொண்டு அதனை சரி செய்ய முயலலாம். தேங்காய் பால் குளிர்ச்சியானதோடு காயங்களை ஆற்றும் திறன்களை கொண்டுள்ளது.
பயன்படுத்தும் முறை:
குளிர்ச்சியான தேங்காய் பாலை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து கீழே துப்ப வேண்டும். இது போன்று நாளொன்று 2-3 முறை செய்து வரும் போது வாய்ப்புண் பிரச்சனைகள் நமக்கு ஏற்படாது மற்றும் இல்லாமல் போய் விடும்.
மேலும் தேங்காய் பாலை வாயில் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் கீழே துப்பி விட வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
இது வாய்ப்புண் போன்ற பிற நோய் தொற்றுகளை எதிர்த்து போராடக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் வாயில் வரும் புண்களை இயற்கையாகவே குணமடைய செய்துவிடுகிறது.
பயன்படுத்தும் முறை:
இரவில் நாம் தூங்குவதற்கு முன்னதாக வாய்ப்புண் உள்ள இடங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.