நாம் பின்பற்றும் சுகாதார விஷயங்கள்தான் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. நம்முடைய தேர்வுகளும், முடிவுகளும் சரியான திட்டமிடலில் செயல்பட்டாலே நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும். ஆனால் அதை மிகச்சரியாக பின்பற்றுவதில்தான் சவாலே இருக்கிறது. எனவே இந்த சவாலை 2022 ஆண்டின் உங்களின் இலக்காக வகுத்துக்கொண்டால் மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
பொருளாதார திட்டம் : உங்கள் வரவு செலவு என்ன என்பதை சரியான முறையில் கையாள முதலில் திட்டமிடுங்கள். பின் அவற்றை ஆக்கப்பூர்வமாக எப்படி செலவு செய்ய வேண்டும் அல்லது பணத்தை ஈட்ட வேண்டும் என்பதை வகுத்துக்கொள்ளுங்கள். தினசரி உங்கள் வரவு செலவுகளை எழுதி வையுங்கள். சேமிப்பு மிக மிக அவசியம். அதை மறவாமல் பின்பற்றுங்கள். இப்படி உங்கள் வரவு , செலவுகளை கருத்தில்கொண்டு உங்கள் செலவினங்களை பார்த்துக்கொண்டாலே பொருளாதார சிக்கல்கள் இருக்காது. எனவே இதை தினமும் தவறாமல் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதார ரீதியாக நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கையும் வகுத்துக்கொண்டு அதை நோக்கி பயணம் செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவு : உணவுதான் நம் ஆரோக்கியத்தின் ஆணி வேர். எனவே அதை ஆரோக்கியமானதாகவும், சரியான நேரத்திலும் எடுத்துக்கொண்டாலே பாதி பிரச்சனைகள் தீரும். இதனால் தேவையற்ற நோய்களையும் தவிர்க்கலாம். எனவே சமநிலையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள். ஆரோக்கியமானதை மட்டுமே சாப்பிடுவேன் என முடிவெடுங்கள். வெளி உணவுகள், ஜங்க் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிருங்கள். நேரத்திற்கு சாப்பிடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.
ஆக்டிவாக இருங்கள் : உடல் உழைப்பு ஆரோக்கியத்தின் அடுத்த தேவை. உடல் இயக்கங்கள் சீராக இருக்க வேண்டும் எனில் அவற்றிற்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு என தீராத நாள்பட்ட நோய்களை அனுபவிக்க நேரிடும். எனவே நீங்கள் அமர்ந்தே வேலை செய்தாலும் குறைந்தது அரை மணி நேரமாவது உடலுக்கு உழைப்பை கொடுங்கள். எப்போதும் சுருசுருப்பாக ஆக்டிவாக இருங்கள்.
மன ஆரோக்கியத்தில் அக்கறை : ஆரோக்கியம் என்பது உடலுக்கு மட்டுமல்ல. மனமும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எனவே உங்கள் மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள பிடித்த விஷயங்களை செய்யுங்கள். நெகட்டிவ் விஷயங்களை முற்றிலுமாக தவிருங்கள். உங்களுக்கு எதை செய்தால் பாசிட்டிவ் உணர்வு வருமோ அதை தொடர்ந்து கைவிடாமல் செய்யுங்கள். நெகட்டிவ் எண்ணங்கள், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற விஷயங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.
உறவில் அக்கறை : உங்களை சுற்றியுள்ள உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களுடன் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள். அவர்களுக்கும் உங்களுடைய பாசிட்டிவிட்டியை பரப்புங்கள். இது உங்களுக்கும் மன அளவில் மகிழ்ச்சியை உண்டாக்கும். மன்னிப்பு, நன்றி போன்ற விஷயங்களை பயன்படுத்த தயக்கம் காட்டாதீர்கள். தொழில்நுட்பங்களை தவிர்த்துவிட்டு நேரில் சென்று அன்பை பரிமாறுங்கள். இதனால் வரும் மகிழ்ச்சி இருமடங்காக இருக்கும். அதை நீங்களே உணர்வீர்கள்.