ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி தசைகளை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், ஜிம்மிற்குச் செல்ல உங்கள் பிஸியான கால அட்டவணையில் இருந்து சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
சீரான உணவுப் பழக்கவழக்கங்களுடன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஒரு வேளை பணிச்சுமை நேரமின்மை போன்ற காரணங்களால் உங்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை எனில், எந்த இடத்திலும் எளிதில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பிளாங்க்ஸ் (Planks) : பரபரப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு, பிளாங்க்ஸ் சிறந்த உடற்பயிற்சி வகை. உங்கள் வீட்டில் உடற்பயிற்சி செய்ய விசாலமான ஒரு பகுதி இருந்தால், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பிளாங்க்ஸ் பயிற்சிகளை செய்ய முடியும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பு வேகமாகக் கரையும். எவ்வளவு நேரம் பிளாங்க் நிலையில் இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய உடல், வயிறு உறுதியாகும். கீழ் முதுகுவலியின் அபாயத்தைக் குறைக்கிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும். குறிப்பாகத் தோள்பட்டை மற்றும் முக்கிய தசைகள் உறுதியாவதுடன் உடலின் அசைவுக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும்.
புஷ்-அப்ஸ் (Push-ups) : புஷ் அப் என்பது உங்க முழு உடலையும் தசைகளையும் ஈடுபடுத்தும் ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்த புஷ்அப் பயிற்சியை நீங்கள் எந்த உபகரணும் இல்லாமல் செய்ய முடியும். புஷ்அப் உங்கள் தசைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த உதவுகிறது. இதயத் துடிப்பு அதிகரித்து உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது. புஷ்அப் செய்வது உங்க மன அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது. கவனம் செலுத்துவதில் சிக்கல் போன்றவற்றை சரிசெய்து மனதை சமநிலைப்படுத்த உதவுகிறது. குறிப்பாக புஷ் அப் உடற்பயிற்சியானது பிளாங்க்ஸ் உடற்பயிற்சிகளில் கிடைக்கும் நன்மைகளை கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு சரியான உடற்பயிற்சி முறையைத் தேடுகிறீர்கள் என்றால் புஷ்-அப் உடற்பயிற்சியை உங்கள் பயிற்சி பட்டியலில் இதனை சேர்ப்பது நல்லது.
குந்துதல் (Squats) : உங்கள் எடை இழப்புக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்று குந்துதல் (Squats). இது அனைத்து முக்கிய தசைகளையும் செயல்படுத்த உதவுகிறது. குந்துதல் பயிற்சியை முடிக்க, நீங்கள் உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பயிற்சியை தொடங்கும் ஒவ்வொரு முறையையும் ஆழ்ந்த மூச்சை இழுத்து எடுத்து, பின்னர் மூச்சை வெளியேற்ற வேண்டும். குந்துதல் (Squats) கீழ் முதுகு மற்றும் இடுப்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் உடல் வலிமையை அதிகரிக்கிறது. உங்கள் வயிற்றில் உள்ள கூடுதல் கொழுப்பை கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும் இது ஒரு சரியான உடற்பயிற்சி ஆகும்.
ஜாகிங் (Jogging) : ஜிம்மிற்கு செல்ல பயப்படுபவர்களுக்கு மற்றொரு சாய்ஸ் ஆக இருப்பது ஜாகிங். காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு விறுவிறுப்பான ஜாகிங் செல்வது, இரத்தக் குழாய்களையும் ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புக்களையும் வலுவடைய செய்கின்றது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகின்றது. நீங்க நாளொன்றுக்கு தொடர்ந்து 30 நிமிடங்கள் ஓடினால் 671 கலோரிகள் வரை எரிக்கப்படும்.