உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை தருவதில் வைட்டமின்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 'சூரிய ஒளி வைட்டமின்' என்று அழைக்கப்படும் வைட்டமின் டி மிக அவசியமானது. இதை பெறுவதற்கு பலர் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்து கொள்வது வழக்கம். இதை எளிதாக பெற தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே போதும்.
இந்த வைட்டமின் டி சத்து, நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை சீராக இயக்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இது குறைவாக இருந்தால் பல்வேறு நோய்கள் உடலை தாக்க கூடும். சிலர் வைட்டமின் டி மாத்திரைகளை உடலுக்கு தேவையான அளவை விடவும் அதிகம் எடுத்து கொள்கின்றனர். இதனால் மோசமான பக்க விளைவுகள் உண்டாகும். சில முக்கிய அறிகுறிகளின் மூலம் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்து கொள்வதை நிறுத்த வேண்டும் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அவை என்னென்ன என்பதை விரிவாக பாப்போம்.
வைட்டமின் டி : பொதுவாக உடலில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வைட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்வோம். அந்த வகையில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் அதற்கான மாத்திரைகளை எடுத்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர். உடலில் பல்வேறு செயல்பாடுகளை செய்வதற்கு இந்த வைட்டமின் டி முக்கியமானதாக உள்ளது.
எப்போது நிறுத்த வேண்டும் : வைட்டமின் டி மாத்திரைகளை வாழ்நாள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. இதை எடுத்துக்கொண்ட சில மாதங்கள் கழித்து உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விட்டால் அதை நிறுத்த சொல்வார்கள். அதீத ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நச்சு தன்மையை தரும். இதனால் பல உடல் உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். எனவே சில கீழுள்ள அறிகுறிகள் இருந்தால் அவசியம் நிறுத்தி விட வேண்டும்.
ஹைப்பர்கால்சிமியா : வைட்டமின் டி என்பதை கால்சியம் சத்தை உடலில் எடுத்துக்கொள்ள உதவுகிறது. அந்த வகையில் அதிகமாக மாத்திரைகளை எடுத்து கொள்வதால் உடலில் நிறைய கால்சியம் சத்து கூடிவிடும். இதை ஹைப்பர்கால்சிமியா என்று சொல்வார்கள். இது மிக மோசமான நிலையாகும். உடலில் 8.5 to 10.8 mg/dL என்கிற அளவிற்கு அதிகமாக கால்சியம் இருந்தால் அவசியம் வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இதனால் உடல் பலவீனம் ஆகிவிடும்.