நாம் உயிர் வாழுவதற்கு நம் உடலில் ராஜ உறுப்புகள் என்று சொல்லக் கூடிய சில உறுப்புகளின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானவை. இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்றவற்றின் வரிசையில் சிறுநீரகங்களின் செயல்பாடு மிக முக்கியமானது. நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி, அந்தக் கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது தான் சிறுநீரகங்களின் முதன்மையான பணியாகும்.
இது தவிர ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகிறது மற்றும் உடலில் பிஹெச் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. ஆக, பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சிறுநீரகத்தில் ஏதேனும் கோளாறுகள் என்றால், அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக் கூடும். ஆக, இதை தகுந்த அறிகுறிகளுடன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முகம், பாதங்களில் வீக்கம் : நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி நம் உடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. ஒருவேளை ஏதேனும் சிக்கல் காரணமாக இந்த வேலையை அது செய்யத் தவறினால் கழிவுகளும், நச்சுக்களும் நம் உடலில் தேக்கம் அடையும். அதுதான் கன்னம் மற்றும் பாதங்களில் வீக்கங்களாக தென்படும். கண்களை சுற்றியிலும் உப்பலாக காட்சியளிக்கும்.
சிறுநீர் கழிப்பதில் மாற்றம் : பொதுவாக ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும் நடவடிக்கையை சிறுநீரகம் மேற்கொள்ளும். ஆனால், சிறுநீரகம் கோளாறு அடையும் போது சிறுநீர் பாதையின் நடவடிக்கைகள் மாற்றம் அடையும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். சிலருக்கு சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம். சிறுநீர் மிகுந்த துர்நாற்றத்துடன் வந்தால் அது சிறுநீரக பிரச்சினையின் அடையாளமாகும்.
சிறுநீரக நலன் : சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதுடன், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். போதுமான தூக்கம் அவசியம். மது அருந்துவதை கைவிட வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டும்.