முழு உண்மையையும் புரிந்து கொள்ளாமல் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் பலர் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்களை கூடுதலாக எடுத்து கொள்கின்றனர். சுருக்கமாக சொன்னால் வைட்டமின்கள் உடலுக்கு இன்றியமையாதவை என்றாலும் அவை குறிப்பிட்ட அளவில் உடலுக்குள் போகும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். சில வைட்டமின்களின் அதிக அளவு உடலில் இருந்து தானே அகற்றப்படும் அல்லது நச்சுத்தன்மையை விளைவிக்கும்.
உடலுக்கு இன்றியமையாதது வைட்டமின் டி:
வைட்டமின் டி ஒரு தனித்துவமான ஒன்று. ஏனெனில் இதை சூரிய ஒளியின் மூலம் பெறலாம். உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வைட்டமின் டி உதவுகிறது. குறைந்த அளவு வைட்டமின் டி இருப்பது எலும்பை தான் முதலில் பாதிக்கிறது. இந்த வைட்டமினில் குறைபாடு ஏற்படுவது உடலின் கால்சியத்தை உறிஞ்சும் திறனை குறைத்து காலப்போக்கில் எலும்பு சிதைவு ஏற்படும்.
ஹாஸ்பிடலில் அட்மிட்டான நபர்..
சமீபத்தில் நடுத்தர வயது மனிதர் வைட்டமின் டி அல்லது ஹைப்பர்விட்டமினோசிஸ் டி அதிகமாக எடுத்து கொண்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல்களின்படி அவர் வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஓவர்-தி-கவுன்டர் சப்ளிமெண்ட்ஸ்களை தினமும் சாப்பிட்டுள்ளார்.
அவரின் மருத்துவ பரிசோதனையில் உடலுக்கு தேவையானதை விட 7 மடங்கு வைட்டமின் டி இருப்பதும், அதிக அளவு கால்சியம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதிக அளவு வைட்டமின் உடலில் இருந்ததால் மீண்டும் மீண்டும் வாந்தி, குமட்டல், வயிற்று வலி மற்றும் கால் பிடிப்புகள் இருந்தன. தவிர எடை இழப்பு, அடிக்கடி தாகம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிற அறிகுறிகளும் இருந்துள்ளன. ஒருகட்டத்தில் அவர் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதை நிறுத்திய பிறகும் அறிகுறிகள் ஓயவில்லை.
வைட்டமின் டி எப்போது அச்சுறுத்தலாகிறது?
பொதுவாக பரிந்துரைக்கும் அளவை விட அதாவது 20 முதல் 40 ng/mL-ஐ விட பெரியவர்கள் அதிகம் வைட்டமின் D அளவை உட்கொள்ளும் போது, இந்த அத்தியாவசிய வைட்டமின் நச்சுத்தன்மையாக மாற்றுகிறது. வைட்டமின்களை சரியான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், பலர் அதை தாங்களாகவே எடுத்து கொள்வதாலும், வைட்டமின் டி அதிகமாக எடுக்கும் நிகழ்வு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய முக்கிய 2 கூறுகளை உடல் உறிஞ்ச துணை புரிகிறது. வைட்டமின் டி-ஐ அதிகம் எடுப்பது உடலில் கால்சியத்தின் அளவை உயர்த்துகிறது. உடலில் அதிக அளவு கால்சியம் இருப்பது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. அதிக அளவு வைட்டமின் டி இருப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் நீர் இழப்புக்கு வழிவகுக்கிறது. சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்துகிறது.
வைட்டமின் டி அதிகம் இருப்பதால் ஏற்படும் நச்சுத்தன்மை அறிகுறிகள்..
பொதுவாக உடலில் 100 ng/mL-க்கும் அதிகமான வைட்டமின் டி இருப்பது உடலுக்கு நன்மை செய்வதை விட தீமை செய்யும். உங்கள் உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, ஒழுங்கற்ற குடல் இயக்கம், மனச்சோர்வு, மனநோய், சில தீவிர நிகழ்வுகளில் கோமா உள்ளிட்டவை இருக்கின்றன.