வரும் முன் காப்போம் என்பது மழைக்கால நோய்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் மழை சீசனில் வரும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் நம்மை பல நாட்களுக்கு படாதபாடுபடுத்தி விடும். எனவே நோய்வாய்ப்படுவதற்கு முன் உண்மையிலேயே தடுப்பு சிறந்தது. அதே போல ஜலதோஷத்திற்கு மாத்திரைகளை சாப்பிடுவதை விட நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சில மசாலா பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
மேலும் இவை பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ள கிச்சன் பொருட்களில் மஞ்சள், இலவங்கப்பட்டை உள்ளிட்ட பல அடக்கம். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மசாலா பொருட்களை பார்க்கலாம்.
கரு மிளகு: பண்டைய இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகளில் கரு மிளகு ஒரு நாணயமாக பயன்படுத்தப்பட்டது. ஏன் இந்த மசாலாவுக்கு இவ்வளவு வர்த்தக மதிப்பு இருந்தது தெரியுமா? இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பாஸ்பரஸ், மாங்கனீஸ், கரோட்டின், செலினியம் மற்றும் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது கரு மிளகு. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த கரு மிளகு சந்தேகத்திற்கு இடமின்றி நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த பொருளாகும்.
மஞ்சள்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு அற்புதமான மசாலா மஞ்சள். இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் முதல் புற்றுநோய் எதிர்ப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும், நம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற மழைக்கால சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் குடிப்பது சிறந்த வழி.
கிராம்பு: சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்னைகளின் போது கிராம்பு எடுத்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. ஒரு காரமான வாசனை மற்றும் மிகவும் தனித்துவமான சுவை கொண்ட கிராம்பு அழற்சி எதிர்ப்பு, கிருமி அழிப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால் உடலுக்கு நன்மைகள் செய்கிறது. காய்ச்சல் பருவத்தில் நோய் வராமல் இருக்க கிராம்பு சாப்பிடுவது கூடுதல் உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை மற்றொரு சிறந்த மசாலாவாக பயன்படுகிறது. தேநீர் முதல் உணவுகள் வரை பல பொருட்களில் இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையின் மற்றொரு முக்கிய ஆரோக்கிய நன்மை சளி மற்றும் தொண்டை வலியை ஆற்றும் திறன். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாலிபினால்கள் மற்றும் புரோந்தோசயனிடின்கள் உள்ளன, அவை இயற்கையாகவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.