சாய் பல்லவி என்ற பெயரை கேட்டவுடனே நம் மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது பிரேமம் படத்தின் மலர் டீச்சர் கேரக்டர் தான். அந்தப் படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
ஃபேர்னஸ் கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்தவர் : ஒன்றிரண்டு படங்கள் ஹிட் ஆன உடனேயே நடிகைகள் பலர் விளம்பரத்தில் நடிக்கத் தொடங்கி விடுவார்கள். குறிப்பாக, சிவப்பு அழகும், பொலிவும் தரக் கூடியது என்று சொல்லி ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடிப்பார்கள். ஆனால், அத்தகைய விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தவர் சாய் பல்லவி. இது மட்டுமல்லாமல் திரையில் வெளிப்படுத்தும் நடிப்புத் திறன் மூலமாக எண்ணற்ற ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
கருணை மிக்கவர் : பிறருக்கு உதவி செய்வதில் சாய் பல்லவிக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் மனதில் இருக்கும் கருணை மனதிற்கு அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சாட்சியாக இருக்கிறது. அந்தப் பதிவில், “ஒருவர் நன்றிக் கடன் செலுத்த வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.