ஓரளவிற்கான கோபம் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும். ஆனால் குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லாமல் நீங்கள் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத கோபம், எரிச்சலாக அல்லது ஆக்ரோஷமாக இருப்பதை போல உணர்ந்தால் ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறும். கோபத்தை நிர்வகிப்பதில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் அடிக்கடி எரிச்சல் அல்லது கோபப்படுவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பதை முதலில் நீங்கள் கண்டறிவது அவசியம்.
உங்களது மனஅழுத்த சூழல் : அறியப்படாத அல்லது வெளிப்படையான காரணங்கள் இல்லாமல் நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்றால் அதற்கு பின்னால் உங்களுக்கு அப்போதிருக்கும் மனஅழுத்தம் மிகுந்த சூழல் காரணமாக இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும் நிலையில், அதையே யோசித்து கொண்டிருக்கும் நீங்கள் அதன் அழுத்தம் காரணமாக விரக்தியாக அல்லது எரிச்சலாக உணரலாம். அதை கட்டுப்படுத்த தெரியாமல் நீங்கள் வழக்கத்தை விட அதிக கோபத்தை வெளிப்படுத்த கூடும்.
குடும்ப உறுப்பினர்கள் : உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமற்ற சூழலை நீங்கள் சமாளித்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் கோபம் மற்றும் எரிச்சலாக உணர அதுவே ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து கோபம் உள்ளிட்ட பல பழக்கங்களை கற்று கொள்கிறார்கள். சிறு வயதில் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் அல்லது தாத்தா, பாட்டியிடம் அடிக்கடி திட்டு வாங்கி தண்டனைகளை அனுபவித்திருந்தால், தற்போது நீங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின் நீங்களும் இந்த பழக்கத்தை பின்பற்ற கூடும். இதற்கு பரம்பரை தான் காரணம் என நீங்கள் தவறாக நினைத்து கொண்டிருக்க கூடும்.
கடந்த கால அதிர்ச்சி : கடந்த காலத்தில் நீங்கள் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரலாம். நீங்கள் விரும்பத்தகாத சூழலை எதிர்கொள்ளும் போது அது சிறியதாக இருந்தாலும் கூட,கடந்தகால அதிர்ச்சியின் விளைவாக போஸ்ட் ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் (PTSD) நிலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் இது உங்களுக்குள் கோபம், விரக்தி, எரிச்சல் அல்லது பயத்தை தூண்டும்.
எதிர்பார்ப்பு : கோபம் - எதிர்பார்ப்பு இரண்டுக்கும் இடையே நிறைய தொடர்பு உண்டு. சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது அல்லது மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் எதிர்பார்ப்பு இரண்டுமே சுமையாக இருக்க கூடும். உங்கள் மீது யதார்த்தமற்ற மற்றும் சுமையான எதிர்பார்ப்புகளை ஒருவர் வைக்கும் போது அல்லது நீங்கள் பிறரிடம் சில விஷயங்களை எதிர்பார்த்து அது நடக்காத போது ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்பு அடிக்கடி கோபம் ஏற்பட காரணமாகலாம்.
தீராத துக்கம் : துக்கத்தை அனுபவிக்கும் நபர்கள் கோப உணர்வுகளை அனுபவிப்பதும் பொதுவானது. இந்த கோபம் விரக்தி மற்றும் உதவி கிடைக்காத உணர்வின் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் ஒருவரது இழப்பால் இதுவரை தெரியாத பல பொறுப்புகள் மற்றும் பணிகள் மற்றொருவருக்கு ஒப்படைக்கப்படும். துக்கத்திலிருந்து மீள முடியாமல் ஒருபக்கம் திண்டாடும் போது மற்றொரு பக்கம் பொறுப்புகள் சுமை மற்றும் அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே தீராத துக்கம் ஒருகட்டத்தில் கோபமாகவே காணப்படும் சூழலை ஏற்படுத்துகிறது.