“வாட்டர் பர்த்” என்பது பண்டைய காலங்களில் பிரசவம் பார்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். அதாவது குழந்தை வெளிவரும் பிரசவ நேரத்தில், பெண்களை மிதவெப்ப நிலையில் இருக்கும் நீரில் அமரவைத்து பிரசவம் பார்க்கப்படும். சிலருக்கு இதுபோன்ற பாரம்பரிய முறைகளை பற்றிய பயம் இருந்தாலும், பலர் இந்த வாட்டர் பர்த் முறையை அதிகம் விரும்புகிறார்கள்.
மேலும் இம்முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதினால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பதும் தாய்மார்கள் இதனை விரும்புவதற்கு முக்கிய காரணமாகும். முக்கியமாக சாதாரண சுகப்பிரசவ முறையில் ஏற்படும் வலி மற்றும் பதட்டத்தை விட நீரில் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த முறையில் அவை குறைவாகவே இருக்கும். வாட்டர் பர்த் முறையை விரும்புவதற்கான காரணங்கள்.
அமைதியான மனநிலை : இம்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது கர்ப்பிணிகள் வெதுவெதுப்பான வெப்பநிலை கொண்ட நீரில் அமர வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய தசை மற்றும் நரம்புகள் மிகவும் ரிலாக்ஸ் ஆக மாறிவிடும். இதன் காரணமாக ரத்த அழுத்தமானது குறைந்து அதுவே இயற்கை வலி நிவாரணியாக அவர்களுக்கு செயல்படுகிறது. மேலும் இதன் போது சுரக்கும் என்டோர்ப்பின்ஸ் வலியின் தீவிரத்தை குறைத்து அமைதியாக இருக்க உதவுகிறது.
இயற்கை வலி நிவாரணி : மிதமான சூட்டில் இருக்கும் நீரில் அமர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, ரத்த அழுத்தமானது குறைக்கப்பட்டு தசைகள் மற்றும் நரம்புகள் இலகுவாகின்றன. இதன் காரணமாக தேவையற்ற பதட்டம் குறைவதோடு, அந்த சமயத்தில் ஹாப்பி ஹார்மோன்ஸ் எனப்படும் என்டோர்பின்ஸ் சுரந்து இயற்கை வலி நிவாரணியாக இருக்கின்றன.
புயோயன்ட் விளைவு (Buoyant effect): நீருக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அவை குழந்தை வெளி வருவதற்கான இயக்கத்தை ஈசியாக்குகிறது. இதனை தான் புயோயன்ட் விளைவு என்றழைக்கிறார்கள். மேலும் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது குழந்தையானது விரைவில் வெளிவர உதவுவதால் மகப்பேறுக்கான நேரமும் குறைகிறது.
குறைவான சிக்கல்கள்: மருத்துவர்களின் கூற்றுப்படி இம்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அவை பெரினியத்தின் இழுவை தன்மையை அதிகரிக்கின்றன. இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது பெண்களின் பெண்ணுறுப்பு கிழியும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகிறது. மேலும் மித வெப்ப நிலையில் இருக்கும் நீரினால் காயங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அவ்வாறு காயங்கள் ஏற்பட்டாலுமே மிக விரைவில் குணமாக உதவுகிறது.
வாட்டர் பரத் முறை சிறந்ததா ?சாதாரணமான பிரசவத்தை விட நீரில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அதை அதிக நன்மைகள் அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரசவத்தின் போது பெண்களுக்கு உண்டாகும் வலி, மகப்பேறு நேரம் மற்றும் குணமாகும் தன்மை அனைத்தையும் கருத்தில் கொள்ளும் பட்சத்தில் வழக்கமான பிரசவ முறையை விட நீரில் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை அதிக நன்மைகளை கொடுக்கிறது.
சாதாரன பிரசவ முறைகள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது நாம் வலி நிவாரணிகளை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுவே நீரில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அது இயற்கையான ஒரு முறையாகவும், வலி குறைவாகவும் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் எந்த முறையில் குழந்தை பெற்றுக் எந்த கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் பின் முடிவு செய்வது நல்லது.