இடைப்பட்ட விரதம் (Intermittent fasting) தற்போது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. விரதம் இருக்கும் நேரம் மற்றும் உண்ணும் காலத்திற்கு இடையில் மாறும் உணவுப் பழக்கம் பல நிரூபிக்கப்பட்ட உடல்நலன் சார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவுத் திட்டம் ஆகும். இந்த செயல்முறையில் ஒருவர் 12 முதல் 18 மணி நேரம் வரை நீண்ட நேரத்திற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த செயல்முறை எடையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. மேலும் குறைந்த இரத்த அழுத்தம், கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எடை இழப்பு முதல் நாட்பட்ட நோயின் அறிகுறிகளை எதிர்த்து போராடுவது என பல நன்மைகளை கொண்ட இந்த நடைமுறை பழக்கம் மக்களிடையே குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழ் பெற்றுள்ளது என்று கூறலாம். ஆனால் இது அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு வழக்கமா என்றால் அது கேள்விக்குறிதான். இந்த இடைவிடாத உண்ணாவிரதம் ஆண்களில் உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு தொடர்பான இடையூறுகளை சமாளிக்க உதவும். இருப்பினும், பெண்களுக்கும் அதே மாதிரியான நன்மைகளை வழங்குமா என்பது சந்தேகம் தான். இந்த உணவுப்பழக்க முறையை பெண்கள் பின்பற்றலாமா? அப்படி பின்பற்றினால் அதற்கு முன்புமாக இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?. ஏன் என்பது குறித்து பின்வருமாறு காணலாம்.
பெண்கள் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கலாமா? உயிரியல் மற்றும் ஹார்மோன் வேறுபாடுகள் காரணமாக, ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்கள் உண்ணாவிரத முறைக்கு வித்தியாசமாக பதிலளிக்கின்றன. அதிலும் ஆண்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய இந்த உணவு பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, இந்த உணவுப்பழக்கத்தின் முடிவுகள் குறைவாக இருக்கலாம். இது தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இந்த உணவுப் பழக்கத்தை நீண்ட காலமாகப் பின்பற்றுவதால், மூன்று வாரங்களுக்கு இடைப்பட்ட விரதத்திற்குப் பிறகு பெண்களின் இரத்த சர்க்கரை, கட்டுப்பாட்டை இழந்து மோசமாகலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவே இது ஆண்களின் விஷயத்தில் காணப்படவில்லை. பெண்களின் இன்சுலின் உணர்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவர்களின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை குறைந்தது. மேலும், பெண்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றும்போது அது அவர்களின் மாதவிடாய் சுழற்சியை தொந்தரவு செய்யலாம்.
கடுமையான மாற்றங்கள்: சில கடுமையான மாற்றங்கள் பெரும்பாலும் பெண்களில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர்களின் உடல்கள் கலோரி கட்டுப்பாட்டுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருக்கும். நீண்ட நேரத்திற்கு விரதம் இருப்பது மற்றும் அனைத்து கலோரிகளையும் குறுகிய காலத்தில் எடுத்துக்கொள்ளும் போது அது ஹைபோதலாமஸ் என்றழைக்கப்படும் மூளையின் ஒரு சிறிய பகுதியை பாதிக்கலாம். இந்த மாற்றம் உடலில் மற்ற இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு காரணமான கோனாடோட்ரோபின்-வெளியிடும் ஹார்மோனின் (GnRH) சுரப்பை சீர்குலைக்கலாம். இது மாதவிடாய் பிரச்சனை, கருவுறாமை மற்றும் எலும்பு ஆரோக்கியம் ஆகியவற்றை மோசமாக்கும். அதனால்தான் பெண்கள் இடைவிடாத உண்ணாவிரதத்தின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனை முயற்சிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதில் அவர்கள் குறுகிய காலத்திற்கு உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே போதுமானது.
பெண்களுக்கு சிறந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறை என்ன? இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதை சிறிது சிறிதாக மாற்றுவது பெண்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற உதவும். இருப்பினும் ஆண்களை விட பெண்கள் சற்று நிதானமாக அணுக வேண்டும். குறிப்பாக குறுகிய காலத்திற்கு விரதம், குறைவான நாட்களுக்கு இருப்பது மற்றும் குறைந்த கலோரிகளை எடுத்துக்கொள்வது பெண்களுக்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும். பொதுவாக 16/8, 5 : 2 என்ற மாற்று நாட்கள் மற்றும் நேரத்தில் விரதம் இருக்கலாம். அந்த வகையில் பெண்கள் விரதம் எடுக்க வேண்டிய சில வழிகள் குறித்து பின்வருமாறு காணலாம். பயணத்தின் போது 24 மணி நேரத்திற்கும் மேலான விரதத்தைத் தவிர்க்கவும். 12 அல்லது 16 மணி நேரத்திற்கு உண்ணாவிரதம் இருப்பது சிறந்தது. தீவிர விரதத்தில் ஈடுபடாமல் பொறுமையாகவும், குறைவான நாட்களிலும் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, தொடர்ச்சியான நாட்களில் உண்ணாவிரதத்தைத் தவிர்ப்பது நல்லது. உண்ணாவிரத காலத்தில் பழசாறு மற்றும் நீர் ஆகியவற்றை அதிகமாக பருகுவது சிறந்தது. உங்கள் கலோரிகளின் அளவை வெகுவாக குறைப்பதைத் தவிர்க்கவும். யோகா மற்றும் வேகமான நிலையில் ஓடுவது போன்ற தீவிர பயிற்சியில் ஈடுபடாமல் லேசான பயிற்சிகளை செய்யுங்கள்.
இந்த இடைவிடாத உண்ணாவிரதத்தை எப்போது தவிர்க்க வேண்டும்? இடைவிடாத உண்ணாவிரதத்தில், நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட டயட் உணவையும் பின்பற்றவோ அல்லது அதிக கலோரிகளைக் குறைக்கவோ தேவையில்லை. இந்த உணவு உண்ணும் நேரத்தை கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு நடைமுறை. எனவே இது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அப்படியானால் யாரெல்லாம் இந்த உணவு முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும்? கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், நாள்பட்ட மன அழுத்தம் உள்ளவர்கள், செரிமான கோளாறு உள்ளவர்கள், தூக்கக் கோளாறு இருப்பவர்கள்.