கிட்டத்தட்ட 3.5 வருட நீண்ட காத்திருப்புக்கு பிறகு, இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படம் கடந்த மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான ஒரு 'பீரியட்' திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் தெலுங்கு சினிமாவின் இரண்டு சூப்பர்ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ளதே படத்திற்கு போதுமான விளம்பரத்தை வழங்கியதோடு நில்லாமல், ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் கிளப்பியது.
அதன் விளைவாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 257 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது வெற்றிகரமான 12 நாளில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த வெற்றியில் ஜூனியர் என்டிஆர்-க்கு பெரும் பங்கு உண்டு. ஜூனியர் என்டிஆர் என்று அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவ், தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் ஆவார்.
பொதுவாகவே ஆக்ஷன், சென்டிமென்ட், டான்ஸ், ரொமான்ஸ் என தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறும் ஒரு சிறந்த நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது ஆஸ்தான இயக்குனர் ஆன ராஜமௌலியின் படம் என்றால் சும்மா விடுவாரா? அறியாதோர்களுக்கு, இயக்குனர் ராஜமௌலி இயக்கிய சூப்பர் ஹிட் படங்களான ஸ்டூடெண்ட் நம்பர் 1, சிம்ஹாத்ரி மற்றும் யமடோங்கா போன்ற திரைப்படங்களின் நாயகன் நம்ம ஜூனியர் என்டிஆர் தான்.
இன்னும் சொல்லப்போனால் இவ்விருவரும் ஒரே நேரத்தில் தான் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்தார்கள்! ஆர்ஆர்ஆர் படத்திற்காக ஜூனியர் என்டிஆர், வெறும் 5 மாதத்தில் 18 கிலோ உடல் எடையை குறைத்தார். கடைசியாக நடித்த ஜெய் லவ குசா படத்தில் நாம் பார்க்கும் ஜூனியர் என்டிஆர்-க்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் பார்க்கும் ஜூனியர் என்டிஆர்-க்கும் அசராமல் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்.
உடல் எடையை குறைக்க ஜூனியர் என்டிஆர்-க்கு பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் லாயிட் ஸ்டீவன்ஸ் உதவி உள்ளார். இவரின் மேற்பார்வையில் ஜூனியர் என்டிஆர் 18 கிலோ உடல் எடையை குறைத்த பிறகே ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க தொடங்கினார். ஜூனியர் என்டிஆர்-இன் இந்த கடுமையான பயிற்சிகளுக்கு, முயற்சிகளுக்கும் அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் 'கொமரம் பீம்' ஆகதோன்றும் முதல் காட்சியில் கிடைத்த கைத்தட்டல்களும், விசில்களுமே அவருக்கான விருதுகள் ஆகும்!