மூன்று வேளை சாப்பாடு, அவ்வபோது தேநீர், குடிநீர் என்பதைப் போல புகைப்பிடிக்கும் பழக்கம் பலருக்கு அன்றாட தேவையாக மாறிப் போயிருக்கிறது. மது குடிப்பவர்கள் கூட வாரம் ஒருமுறை, மாதம் சில முறை என்ற வரையறை எல்லாம் வைத்துள்ளார்கள். ஆனால், சிகரெட் பிடிப்பது தினசரி கணக்கில் வந்து விடுகிறது. மது, சிகரெட் உள்பட அனைத்து போதை வஸ்துகளும் தீங்கானது தான் என்றாலும் கூட, நம் தினசரி வாழ்வில் இடம் பிடித்துள்ள புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது அவசியமாகிறது.
எப்போதாவது ஒருநாள் : சிலர் தினசரி 4, 5 சிகரெட் பிடிப்பார்கள். சிலர் 10, 15 என்று நீண்ட எண்ணிக்கை வைத்திருப்பார்கள். இதை ஒரே அடியாக நிறுத்துவது சவாலான காரியம் தான். ஆனால், ஏதேனும் ஒரு நாள் முழுவதும் கைவிடுவதற்கு முயற்சிக்கலாம். அந்த நாளில் வெற்றி அடையும் பட்சத்தில் அதேபோல அடுத்த வாரத்திலும் மற்றொரு நாள் முயற்சிக்கலாம்.
ஊக்கத்தை கண்டறியுங்கள் : முதலில் சிகரெட் பழக்கத்தை எதற்காக கைவிட வேண்டும் என்ற கேள்வியை உங்கள் மனதில் எழுப்பிக் கொள்ளுங்கள். உங்கள் உடல் நலனுக்காகவா? பணத்தை சேமிக்கவா? உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும், முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்பதாலா? காரணம் எதுவாக இருந்தாலும், புகைப்பழக்கத்தை கைவிட அதை ஊக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
எது தூண்டுகிறது? சிகரெட் பிடிக்கும் பெரும்பாலான நபர்கள், ஸ்ட்ரெஸ், டென்ஷன் போன்றவை குறைய வேண்டும் என்பதற்காகவும், புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்வதாக குறிப்பிடுகின்றனர். அதுபோல உங்கள் மனதில் சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை தூண்டுவது எது என்பதை கண்டறிய வேண்டும். ஸ்ட்ரெஸ் என்ற பொதுவான காரணம் என்றால் உடற்பயிற்சி, யோகா மூலமாக அதை குறைக்க முன்வரலாம்.
ஆதரவு தேடலாம் : சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நீங்களாக எல்லை வகுத்துக் கொண்டால் அதை நீங்களே மீறிக் கொண்டிருப்பதை உணர முடியும். உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை கேட்கலாம். அவர்களிடம் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது, சிகரெட்டை கைவிட அவர்கள் ஊக்கப்படுத்துவார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம்.
சுய பாராட்டு : புகைப்பிடிப்பதை கைவிடுவது அவ்வளவு சுலபமல்ல. படிப்படியாக வெற்றி பெறும் தருணத்தில் உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டால் அடுத்தடுத்த முன்னேற்றம் கிடைக்கும். உதாரணத்திற்கு நீங்கள் சேமித்த பணத்தில் புத்தாடை வாங்கலாம், நல்லதொரு உணவு சாப்பிடலாம். இதைச் செய்தால் மட்டுமே உங்களுக்கு ஊக்கமாக அமையும்.