நம் வாழ்க்கைக்கு உணவு மிகவும் முக்கியமான அத்தியாவசிய தேவையாகும். ஒரு நாள் நாம் உணவை தவிர்த்தாலும், அதற்கு உண்டான விளைவுகளை நம் உடல் காட்டத் தொடங்கி விடும். நாம் எல்லோருமே உடலுக்கு எது சத்தானது என்பது குறித்து நிறைய விஷயங்களை பரவலாக தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், எப்போது சாப்பிட வேண்டும் என்பது தான் பலருக்கும் தெரியவதில்லை.
உதாரணத்திற்கு காலை 9 - 10 மணிக்குள் அலுவலகம் செல்பவர்களின் காலை உணவு நேரம் ஒரு மாதிரியாகவும், காலை 7 மணிக்கு முன்பாக அலுவலகம் செல்பவர்கள் மற்றும் இரவு பணி முடித்து காலையில் வீடு திரும்புவர்கள் ஆகியோரின் உணவு நேரம் வேறு மாதிரியானதாகவும் இருக்கிறது. ஆனால், அதிகாலையில் எழுந்து, எதையும் விரைவாக செய்து முடிப்பது சாலச் சிறந்தது என்ற பொன்மொழியும் உண்டு.
காலை உணவு நேரம் : ஒரு நாள் பொழுதின் முதல் உணவு இது. அன்றைய நாள் முழுவதுக்குமான ஆற்றலுக்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் இரவு உணவு சாப்பிட்ட சமயத்தில் இருந்து 8 முதல் 10 மணி நேர இடைவெளிக்கு உள்ளாக காலை உணவை சாப்பிட்டிருக்க வேண்டும். சராசரியாக காலை 7 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டு விடுவது சிறப்பு.
இரவு உணவு நேரம் : மதிய உணவை வெகு சீக்கிரமாக சாப்பிட்டு விட்டால் மாலை நேரத்தில் உங்களுக்கு பசி எடுக்கும். இத்தகைய சூழலில் இரவு உணவை வெகு சீக்கிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிக்கு உள்ளாக நீங்கள் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
பலன்கள் : உணவை சரியான நேரத்தில் நாம் சாப்பிடும் போது, உடலுக்கு தேவையான சத்துக்கள் சீரான அளவில் உறிஞ்சப்படுகிறது. நமது வளர்சிதை மாற்றமும் சீரான அளவில் இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுவதால், பசி உணர்வு கட்டுப்பாடு இருக்கும். தேவையற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் குறையும். அது எடை குறைப்பிற்கு உதவும்.