ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் அதே தருணத்தில் பெண் என்பவள் தானும் மறுபிறவி எடுத்து பிறந்து வருகிறாள் என்று சொன்னால் அது மிகையல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் சோர்வு தரக் கூடியதாக பிரசவ காலம் அமையும். இத்தனைக்கு மத்தியிலும் பச்சிளம் குழந்தையை பார்த்து, பார்த்து வளர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் தாய்மார்களுக்கு சேர்ந்து கொள்கிறது. பிரசவ காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் சிலருக்கு நீண்டகாலம் நீடிக்கும். அன்றாட பணிகளை பாதிக்கும். குழந்தைகளை பராமரிக்க இது எந்தெந்த வகையில் தடையாக இருக்கும் என்பதையும், அதை எப்படி முறியடிப்பது என்பதையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரசவல கால சோர்வு எப்படி இருக்கும்: முன்பெல்லாம் வெகுசிலரை மட்டுமே பாதித்து வந்த பிரசவகால சோர்வு என்பது இப்போது எல்லோரையும் பாதிக்கக் கூடியதாக மாறிவிட்டது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனித்து இருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என்ற கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு அவை கூடுதல் சுமையாக மாறியிருந்தன.கொரோனாவால் ஏற்பட்ட நல்ல விஷயம் என்னவென்றால், பிரசவ காலத்தில் ஏற்படும் மன ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பது மட்டுமே.
என்னென்ன தொந்தரவுகள் ஏற்படும்: மனதில் சலிப்பு தட்டும், குழந்தையுடன் பிணைப்பு ஏற்படுத்த முடியாமல் போகும், அன்புக்குரியவர்களை வெறுக்க வைக்கும், சிலர் அதிகமாக சாப்பிடுவர் அல்லது சிலருக்கு பசி இழப்பு, அதிகப்படியான சோர்வு மற்றும் அன்றாடப் பணிகளில் ஆர்வம் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் மீதுதான் எல்லோரது கவனமும் இருக்கும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் எல்லோரது கவனமும் அதன் மீது திரும்பிவிடும். யாரும் தாயை அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவும்கூட அவர்களுக்கு கவலை அளிப்பதாக அமையும்.
மூத்தவர்களின் உதவி கிடைக்காமல் போவது: குழந்தையை வளர்ப்பதில் புதிய தாய்மார்களுக்கு எந்தவித அனுபவமும் இருக்காது. இதனால், தன்னுடைய தாய் அல்லது பாட்டியின் வழிகாட்டுதல் அவர்களுக்கு தேவைப்படும். ஆனால், துரதிருஷ்டவசமாக பாட்டி இறந்து போயிருக்கலாம். அதேபோல, பணி நிமித்தம் காரணமாக நாம் வெகு தொலைவில் வசிக்கும் நிலையில் அம்மாவும் உடன் வந்து இருக்க முடியாத நிலை இருக்கும்.இத்தகைய தருணத்தில் வழிகாட்டுவதற்கு ஆள் இன்றி, பச்சிளம் குழந்தையை பேணி, பராமரிப்பது எப்படி என்று தெரியாமல் புதிய தாய்மார்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குற்ற உணர்ச்சி மேலோங்கும்: பிரசவ கால சோர்வுகள், பாதிப்புகள் மற்றும் பெரியவர்களின் ஆதரவின்மை போன்ற காரணங்களால் தன்னந்தனியாகப் போராடி குழந்தையை வளர்த்து எடுத்தாலும், அவர்களை நாம் உரிய முறையில் கவனமெடுத்து வளர்க்க தவறி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி ஏற்படலாம். ஆனால், ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணம் தானாக மாறிவிடும்.
புதிய தாய்மார்களுக்கான தீர்வு: முடிந்தவரை பெரியவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். எதுவும் இயலாத பட்சத்தில் தயக்கம் இன்றி மனநல மருத்துவரை 3 மாதங்களுக்கு ஒருமுறை அணுகி, மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சில சமயம், இந்திய மரபுகளின்படி குழந்தையை பெற்றெடுக்கும் சமயங்களில் நாம் தாய்வீட்டில் இருப்பதால் கணவனை பிரிந்து வாழும் கவலை ஏற்படக் கூடும். அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவது நல்ல தீர்வாக அமையும். மிக முக்கியமாக மற்ற தாய்மார்களின் வாழ்க்கையோடு, நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது.