கர்ப்பம் மற்றும் பிரசவ காலம் என்பது சில பெண்களுக்கு எளிதானது என்றாலும், ஒரு சிலருக்கு இது சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் நிறைந்தவையாக இருக்கிறது. அதிக ஆபத்துள்ள கர்ப்ப காலம் (high-risk pregnancy) என்பது குறிப்பிட்ட கர்ப்பிணியின் உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது பிரசவத்திற்கு முன் அல்லது அதற்கு பின் சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சூழ்நிலைகளில், பாதுகாப்பான கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், ஆரோக்கியமான குழந்தையைப் பெறவும் கர்ப்ப காலம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு அல்லது கவனிப்பு தேவைப்படலாம்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பம் (high-risk pregnancy) என்றால் என்ன? : ஒரு குழந்தையின் பிறப்புடன் தொடர்புடைய சிக்கல்கள் இருக்கும் போது அது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் கூட அது அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக கருதப்படுகிறது. மேலும் ஒரு சிக்கலான கர்ப்பத்தை விட அதிக ஆபத்துள்ள கர்ப்பம் என்பது தாய் அல்லது அவரது கருவுக்கு அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதை குறிக்கும் ஒன்றாகும். ஒரு கர்ப்பம் பெண்களின் உடலில் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், கவலை மற்றும் மனநலப் பிரச்சினைகளையும் தூண்ட கூடும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் முன் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கான வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கு உள்ளாகும் பெண்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மை தகவல்கள் : High-risk pregnancy நிலையில் இருக்கும் பெண்கள் முதலில் அது குறித்து அனைத்தையும் தெரிந்து கொண்டவராக இருப்பது அவசியம். அதற்காக இன்டர்நெட்டில் கிடைக்கும் அணைத்து தகவல்களையும் படித்து விட்டு நம்பி அச்சப்பட வேண்டாம். உங்கள் நிலை பற்றிய விரிவான மற்றும் உண்மை தகவல்களை மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
ஆதரவளிக்கும் நபர்கள் : அதிக ஆபத்துள்ள கர்ப்ப காலத்தில் மனமும், உடலும் அமைதியின்றி இருக்க கூடும். இதற்கு குறிப்பாக அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தை எதிர்கொள்கிறோம் என்ற மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணம். எனவே, இது போன்ற சூழலில், கர்ப்பிணிகள் நேர்மறையான நபர்கள் தங்களை சுற்றி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள் ஊற்றி இருந்தால் சிக்கலான காலங்களில் கூட விவேகமாக செயல்பட்டு சவால்களையும் சமாளிக்க உதவியாக இருக்கும்.
செயல்முறையை நம்ப வேண்டும் : கர்ப்பம் என்பது 9 மாத காலம் அடங்கிய நீண்ட செயல்முறை. இந்த சமயத்தில் முழு சோர்வு தோன்றும். இருப்பினும், பாதுகாப்பான கர்ப்பத்தை உறுதி செய்ய உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை ஏற்று கொள்வது முக்கியம். இந்த சந்தர்பங்களில் ஆன்லைன் ஆலோசனை பெறுவதை தவிர்த்து, மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரை நம்ப வேண்டும்.
ஆரோக்கிய உணவு : அதிக ஆபத்துள்ள கர்ப்பம் இருப்பது கண்டறியப்பட்டால், வழக்கத்தை விட அதிக அளவு ஆரோக்கிய உணவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
சீரான உடல் செயல்பாடு : மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிமையான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் செயல்பாடுகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதே போல எந்தவொரு தீவிரமான உடற்பயிற்சிகளையும், உடல் செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும், குறிப்பா அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தை கண்டறிந்தால். மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையை பெற்று அதற்கேற்ப உடல் செயல்பாடுகளை வடிவமைத்து கொள்ள வேண்டும்.