அலுவலகம் செல்லும் எல்லோருக்கும் கண்டிப்பாக இந்த அனுபவம் இருக்கும். முந்தைய நாள் இரவில் முறையான தூக்கமின்மை மற்றும் பணிச்சுமை போன்ற காரணங்களால் நீங்கள் அசதியாக உணருவீர்கள். குறிப்பாக, மதிய வேளை உணவு சாப்பிட்ட பிறகு, அலுவலக மேஜை மீது சாய்ந்து விடுவது நம்மில் பலரது வழக்கமாக இருக்கும். இதில் நீங்கள் விதிவிலக்கு அல்ல. உடல் சோர்வாக உணருவது அல்லது கவனச் சிதறல் ஏற்படுவது என்பது பொதுவான விஷயம் தான். குறிப்பாக சாப்பிட்டு முடித்த உடன், கொஞ்சம் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் பலருக்கு தோன்றும்.
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவதற்கு என்ன காரணம்
நாம் உணவை சாப்பிட்டு முடித்தவுடன், செரிமானம் நடக்க வேண்டும் என்பதற்காக சிறுகுடலை நோக்கி ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் மூளைக்கான ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். ஆகவே, உங்களை களைப்பு உணர்வு ஏற்பட்டு, உடனடியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.ஆனால், சாப்பிட்ட பிறகு குட்டி தூக்கம் போட்டால் இந்த களைப்பு போய்விடும் அல்லவா. இருப்பினும், வீட்டில் தூங்குவதைப் போல நீட்டி, முழங்கி அலுவலகத்தில் தூங்கி விட முடியாது. அதற்காக தான் இந்த குட்டி தலையணை நமக்கு கை கொடுக்கிறது.
மதியம் தூங்குவதால் என்ன பலன்?
மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பிறகு தூங்குவதால் நமது நினைவாற்றல் மேம்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கவனத் திறன் மற்றும் கற்பனை திறன் ஆகியவை மேம்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த Wakefit என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமானது, தனது ஊழியர்களை 30 நிமிடம் தூங்குவதற்கு அனுமதிக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் சைத்தான்யா ராமலிங்க கௌடா கூறுகையில், “ஊழியர்கள் மதிய உணவு வேளைக்கு பிறகு 26 நிமிடம் தூங்கி எழுந்தால் பணித்திறன் 33 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று நாஸா அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
அலுவலகத்தில் தூங்கினால் ஏற்படும் பலன்
அலுவலகத்தில் கொஞ்சம் தூங்கி எழுபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமாம். நல்ல கவனத்துடன் செயல்படுவதால் தவறுகள் தவிர்க்கப்படுகிறதாம். பணியாளர்களின் எச்சரிக்கை உணர்வு மற்றும் எண்ணப்போக்கு ஆகியவை மேம்படுகிறதாம். அதே சமயம், மேஜையில் வெறுமனே தலையை வைத்து தூங்குவதைக் காட்டிலும் சிறிய தலையணை கொண்டு சென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கலாம்.