பெண்களின் வாழ்க்கையில் கர்ப்பகாலம் மற்றும் குழந்தைப்பேறு என்பது மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. கர்ப்ப காலத்தில் பல வகையான உடல் ரீதியான மாற்றமும், உளவியல் மாற்றமும் உண்டாகும். சாதாரண நாட்களை விடவும் கர்ப்ப காலத்தின் போதும், அதன் பிறகும் பெண்களின் ஹார்மோன்களும் அதிக அளவில் பாதிக்கப்படும். அதே போன்று கர்ப்பத்திற்காக திட்டமிடும் போதும் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் ஏற்படத் தொடங்குவதை எதிர்கொள்ள வேண்டும். இவை அத்தனையையும் எதிர்கொள்ள சில முக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். இதனை பற்றி விரிவாக இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சீரான உடல் எடை : பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் உடல் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் இருத்தல் ஆகிய இரண்டு நிலைகளும் பாதிப்பை தர கூடியவை. இவை உங்கள் உடலில் கரு உருவாவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற ஆரோக்கியமான உடல் எடை தேவை. உடல் எடையை குறைக்க, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதே போன்று தினமும் நடைப்பயிற்சியும் செய்து வரலாம். உடல் எடை குறைவாக இருந்தால், மருத்துவ ஆலோசனையோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் சத்து மருந்துகள் சாப்பிட வேண்டும்.
சமச்சீர் உணவுகள் : கர்ப்பத்திற்கு முன் மற்றும் கர்ப்ப காலத்தில் நீங்கள் சாப்பிடுவது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள், அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துகள் ஆகியவற்றைப் பெற நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். மேலும் அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.
IFA மாத்திரைகள் : ஒரு பெண் பருவமடைந்த காலத்தில் இருந்து, உடலுக்கு இரும்பு சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. இளமை பருவத்திலிருந்தே, பெண்ணின் உடலுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய IFA மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். மேலும் இத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகள் பற்றி உங்களின் மருத்துவரிடம் ஆலோசிப்பதும் நல்லது.
மன அழுத்தம் : நீங்கள் கருத்தரிக்க திட்டமிட்டிருந்தால், எப்போதும் மகிழ்ச்சியான, இலகுவான மனநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை இடத்தில் மன அழுத்தம் நிறைந்த சூழல் இருந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செயல்களை செய்யுங்கள். இதற்கு யோகா, சுவாச பயிற்சிகள், பாடல், நடனம் மற்றும் மற்ற செயல்பாடுகளை செய்து வரலாம். கருத்தரிக்கும் காலத்தில் பொதுவாகவே மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உங்களுக்கு மன உளைச்சல் இருந்தால் மனநல மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.