

உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள் பெரும்பாலும் ஒருவேளை உணவினை தவிர்த்து விடுவர் அல்லது குறைந்த அளவு உணவையே உட்கொள்வர். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு பட்டினி கிடப்பதோ அல்லது உணவின் அளவைக் குறைப்பதோ ஆரோக்கியமான யோசனையாக இருக்காது. அதற்கு பதிலாக, மக்கள் முறையான உணவுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். மேலும் ஒரு வழக்கமான உடற்பயிற்சி முறையுடன் உங்கள் டயட்டை எடுத்துக்கொண்டால் நிச்சயம் உடல் எடை குறையும்.


அப்படி என்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? உடல் பருமனை குறைக்க எண்ணற்ற பயிற்சிகள் இருந்தாலும் நடைப்பயிற்சி என்பது ஒரு சிறந்த மற்றும் எளிதான உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. வழக்கமான நடைபயிற்சி எடை இழப்பு உட்பட பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு நபர் செய்யக்கூடிய உடற்பயிற்சியின் எளிதான மற்றும் மிகவும் செலவு குறைந்த எளிய வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே இந்த எளிதான முறையைத் பின்பற்றி நீங்கள் எடை இழக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உதவிக்குறிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.


1. படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம் : ஓட்டம், நீச்சல் மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சியின் பிற வடிவங்களைப் போலவே, வேகமும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஒரு நபர் மெதுவாக நடப்பதை ஒப்பிடும்போது விறுவிறுப்பான வேகத்தில் நடைபயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை உடலில் இருந்து வெளியேற்றுகிறார். ஆனால் நடைப்பயிற்சியை ஆரம்பித்த முதல் நாளே ஓடுதலில் ஈடுபடாமல் சாதாரணமாக நடைப்பயிற்சி செய்யுங்கள். வேகத்தை அதிகரிக்க சில நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள், அதையெல்லாம் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம்.


2. ட்ராக் சூட் அல்லது வசதியான எந்தவொரு ஆடைகளையும் அணியுங்கள் : நடைப்பயிற்சியின் போது சரியான ஆடைகளை அணிவது முக்கியம். இது உங்களுக்கு வசதியாக இருக்கும். நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலில் இருந்து வெளியேறும் நீரை உறிஞ்சும் வகையிலும், காற்று புகும் அளவுக்கு இருக்க வேண்டும். எனவே, ஒரு வசதியான ட்ராக் சூட் அல்லது வேறு எந்த உடையையும் தேர்வு செய்வதால், அவை உங்களை அசவுகரியத்தில் விடாமல் உங்கள் நடைப்பயணத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கும்.


3. வசதியான இலகுரக காலணிகளை தேர்வு செல்லுங்கள் : நடைபயிற்சியின் போது உங்கள் கால்கள் உங்கள் முழு உடலின் எடையும் சுமக்கும் என்பதால், நீங்கள் ஒரு வசதியான ஜோடி ஸ்னீக்கர்களை அணிவது அவசியம். கனமான ஜோடி பாதணிகள் வலியை ஏற்படுத்துவதன் மூலம் பயிற்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் காலணிகள் எடை குறைந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


4. தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள் : நீங்கள் நடக்கும்போது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே நீரிழப்பைத் தடுக்க சில சரியான இடைவெளியில் தண்ணீரை பருகுங்கள். உடல் எடையை குறைக்க விரும்புவோர் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது.


5. மேல்நோக்கி நடந்து செல்லுங்கள் : கலோரி இழப்பை அதிகரிக்க, ஒரு நபர் தொடர்ந்து மேல்நோக்கி நடக்க வேண்டும். இதற்காக ஒரு நபர் மலைகள் அல்லது படிக்கட்டுகளில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மேல்நோக்கி நடப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொடை பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க முடியும்.


6. வடிவம் மற்றும் தோரணையில் கவனம் செலுத்துங்கள் : நடைபயிற்சி என்று வரும்போது, வடிவம் மற்றும் தோரணையை பராமரிப்பது முக்கியம். நீங்கள் நடக்கும்போது உங்கள் முதுகெலும்பை நிமிர்ந்து வைத்திருங்கள். உங்கள் கைகளையும் தோள்களையும் உறுதியாக அதே சமயம் நிதானமாக வைத்திருக்க வேண்டும். 8 வடிவத்தில் நடைபயிற்சியை மேற்கொள்வதும் நல்ல நல்ல பலனை தரும்.


7. சில எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் : அதிக கலோரிகளை எரிக்கவும், புதிய தசையின் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஒரு நபர் தங்கள் நடைப்பயணத்தின் போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு சில எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபடலாம். ஸ்குவாட்ஸ், புஷ்அப்ஸ், பர்பீஸ், ட்ரைசெப் டிப்ஸ், லங்ஸ் போன்ற குறுகிய உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சியின் இடைவேளையின் போது செய்து வந்தால் அது ஒரு நபரின் இதயத் துடிப்பை அதிகரிக்கவும் தசையை வளர்க்கவும் உதவும். நடைபயிற்சி வழக்கத்தை மேலும் சுவாரஸ்யமாக்கவும் அவை உதவக்கூடும்.