இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மக்களை மீண்டும் முடக்கிப்போடும் விதமாக உருமாறியிருக்கும் இந்த கொரோனா அதி தீவிரமாக பரவக்கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கொரோனா பாசிடிவ் என உறுதியான பெண் தன்னுடைய அனுபவத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு கொரோனா அறிகுறி இருந்த சமயத்தில் மாதவிடாய் கூட தள்ளிப்போனது எனக் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் “ எப்போதும் எனக்கு மாத இறுதியின் 28 தேதி மாதவிடாய் வரும். அந்த சமயத்தில் கொரோனா அறிகுறியும் இருந்தது. ஆனால் 20 வரவில்லை சரி இரண்டு நாட்கள் காத்திருந்தேன். ஏனெனில் 2 நாட்கள் தள்ளிப்போவது பெரிய விஷயமல்ல. ஆனால் அதற்கு அடுத்த 2 நாட்களும் வரவில்லை. பின் மகப்பேறு மருத்துவரை தொலைபேசியில் அணுகி இதுகுறித்து பேசினேன். கர்ப்பமாக இருக்கிறேனா என சோதனை செய்யச்சொன்னார். நானும் சோதனை செய்யும் கருவியை வாங்கி வீட்டில் பரிசோதித்ததில் நெகடிவ் என்றுதான் காட்டியது. இருப்பினும் எனக்கு மாதவிடாய் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
பின் எக்சரே, ஸ்கேன் என அனைத்தும் செய்து பார்த்தேன். எந்த குறையும் இல்லை என மருத்துவர் கூறினார். பின் மகப்பேறு மருத்துவரிடம் பேசினேன் அவர் “ நீங்கள் மனதளவிலும் , உடலளவிலும் பாதிக்கப்பட்டிருப்பதால் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், உடல் ஆற்றல் இழந்து இருப்பதாலும் தள்ளிப்போகலாம். எனவே உடல் நலனில் அக்கறை செலுத்தி ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு வாருங்கள். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்” என்று பரிந்துரைத்தார்.