உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு இதயம். இதன் செயல்பாட்டில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட அது நமது முழு ஆரோக்கியத்தையும் கெடுக்கும். நமது உணவு முறைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்புண்டு. எடுத்துக்கொள்ளும் உணவின் தரத்தை பொறுத்து நமது உடல் உறுப்புகளின் செயல்பாடும் மாறும். குறிப்பாக முக்கிய உறுப்பான இதயத்தை பாதிக்க கூடிய உணவுகள் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்களாக தவறான உணவுமுறையை மேற்கொண்டு வந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இப்படிபட்ட பாதிப்புகள் கொண்டோர் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம் என இதயநல மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.
சீஸ்:நவீன உணவு முறையில் சிறந்த ருசியை தருவதற்கு பெரும்பாலான உணவுகளில் சீஸ் சேர்ப்பது வழக்கமாகி விட்டது. குறிப்பாக சீஸ் சேர்த்த பிரட் டோஸ்ட், சீஸ் சேர்த்த பீட்சா, சீஸ் சேர்த்த பர்கர்..இப்படி ஏராளமான உணவுகளை சொல்லலாம். சீஸில் அதிக சோடியம் உள்ளதால் இதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர்.
கெட்சப்: தக்காளி சாஸ் என்று அழைக்கப்படும் கெட்சப், சாப்பிடுவதற்கு மிக ருசியாக இருக்கும். இதன் சிறந்த சுவையினால் பல வகையான உணவுகளுடன் இதை தொட்டு சாப்பிடுவோம். ஆனால், இதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பு நமது உடலுக்கு நல்லதல்ல. ஒரு டேபிள்ஸ்பூன் கெட்சப்பில் 190 மி.கி அளவு சோடியம் உள்ளது. இதை பிரெஞ்சு பிரைஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது உப்பின் அளவு இரட்டிப்பாகும். எனவே இவற்றை சாப்பிட வேண்டாம்.
மினரல் வாட்டர்: பலரின் வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் இந்த மினரல் வாட்டர் கூட உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் என்கின்றனர் இதயநல மருத்துவர்கள். ஓரு லிட்டர் பாட்டில் மினரல் வாட்டரில் 200 மி.கி சோடியம் உள்ளது. எனவே மினரல் வாட்டரை தவிர்த்து சாதாரண நீர் குடிப்பது சிறந்தது.இதயநல மருத்துவர்கள் கூறியுள்ள மேற்சொன்ன உணவுகளை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் தவிர்ப்பது சிறந்தது.