உயர் கொலஸ்டிரால் சமீப காலமாக சைலன்ட் கில்லர் ஆக பலரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிப்பதோடு மட்டும் அல்லாமல் உயிர் கொல்லியாகவும் மாறி வருகிறது. கொலஸ்ட்ரால் அளவு நம் உடலில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான திட்டவட்டமான அறிகுறிகள் எதுவும் கிடையாது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை தான் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன.
நம்முடைய வாழ்க்கை முறையை சீராக அமைப்பதுதான் இதற்கான தடுப்பாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் உயர் கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். அந்த வகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் நீங்கள் ஓய்வு எடுக்கும்போது உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலி அல்லது மாற்றம் ஏற்பட்டால் அது உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து இருப்பதற்கான அறிகுறி என்று கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
வலி மற்றும் கொலஸ்டிரால் இடையே உள்ள தொடர்பு :
தற்போதைய ஆய்வு கண்டுபிடிப்பின்படி உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது உடலில் ஆங்காங்கு வலி ஏற்படும். எனவே வலிக்கும் கொலஸ்டிராலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆய்வாளர்கள் பாதம் மற்றும் கால் விரல்களில் எரிச்சலான மற்றும் தீவிரமான வலி இருப்பது, உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாக கூறுகின்றனர். சமீபத்தில் உள்ள உயர் கொலஸ்ட்ரால் இருப்பதாக கண்டறியப்பட்ட பல நோயாளிகளில் கால்களில் எரிச்சல் மற்றும் வலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பலரும் தொடை மற்றும் கால்களில் மற்ற பகுதிகளிலும் வலி இருப்பதாக கூறியுள்ளனர்.
அறிகுறிகள் எப்போது தென்படும்?
பொதுவாக நீண்ட நேரம் வேலை செய்தாலோ அல்லது பயணம் அல்லது வேறு ஏதேனும் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இருந்தால், உடல் சோர்வு மற்றும் வேறு அறிகுறிகள் தோன்றும். ஆனால் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறிய உதவும் இந்த அறிகுறி நீங்கள் ஓய்வாக இருக்கும் போது தான் பெரிதும் தென்படும். உதாரணமாக நீங்கள் தூங்கும் பொழுது அல்லது காலையில் எழுந்து கொள்ளும் போது நீண்ட நேரம் ஓய்வெடுக்கும் போது எரிச்சலான உணர்வு கால்களில் ஏற்படும்.
இவ்வகையான அசௌகரியம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை தூக்கத்தை பாதிக்கும். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் வயதானவர்களில் காணப்படுவதால் இது முதியவர்களிடையே உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே கால் எரிச்சல் மற்றும் வலியால் சரியான தூக்கம் வராத முதியவர்கள் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும்.