சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லோருக்கு தெரிந்த பாடமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, “தாத்தா உங்களுக்கு சுகர் இருக்கு, ஸ்வீட் சாப்பிடக் கூடாது” என்று செல்லமாக கட்டளையிடக் கூடிய நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், சர்க்கரை மட்டுமல்லாமல் வேறுபல உணவுகளிலும் சர்க்கரை சத்து மிகுதியாக இருக்கிறது என்பதையும், அவை காரணமாகவும் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கின்றன என்பதையும் நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
பேக்கிங் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் : இன்றைக்கு பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்ற பெரும்பாலான உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட மாவுப் பொருட்களால் தயாரானவை ஆகும். இந்த உணவுப் பொட்டலங்களின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாவுச்சத்தின் அளவை நீங்கள் கவனிக்க வேண்டும். இவை நமது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உலர் பழங்கள் : உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை தான் என்றாலும் கூட, இவற்றில் சர்க்கரை சத்து மிகுதியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிலும், பழங்களாக சாப்பிடும்போது ஆரோக்கியம் தருகின்ற அதே உணவுகள் தான் உலர் பழங்களாக இருக்கும்போது சர்க்கரை மிகுதியானதாக மாறுகிறது. இருப்பினும் உலர் பழங்கள் சாப்பிடுவது உங்கள் விருப்பமாக இருப்பின், அவை சர்க்கரை சத்து குறைவானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மதுபானங்கள் : மதுபானங்களில் சர்க்கரை மற்றும் மாவுச்சத்து மிகுதியாக உள்ளன. குறிப்பாக, இந்த சத்துக்களை மிகுதியாகக் கொண்ட பீர் மற்றும் ஒயின் போன்ற பானங்களை சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தும்போது, சர்க்கரை நோய்களுக்கான மருந்துகளின் செயல்திறன் பாதிக்கப்படுகின்றன.
செறிவூட்டப்பட்ட மாவுப்பொருள் : மைதாவில் தயாராகும் புரோட்டா, பிரெட், ரோட்டி போன்ற உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். கேக் சாப்பிடுவதும் கூட அபாயம் கொண்டது தான். ஏனென்றால் இந்த உணவுப் பொருள்களில் நார்ச்சத்து மிக, மிக குறைவு. இது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். ஆகவே, காய்கறிகள் மற்றும் பருவகால பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.