நாளொன்றுக்கு 7 - 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது ஒருவரது இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துவதோடு புறதமனி நோய் (PAD) வளர்ச்சிக்கும் வழிவகுப்பதாக European Heart Journal இதழில் மார்ச் 16, 2023 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனிடையே தினசரி இரவு நேரத்தில் 7 - 8 மணி நேரம் ஒருவர் தூங்கும் பழக்கம் அவருக்கு PAD ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது என ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர். ஷுவாய் யுவான் குறிப்பிட்டு இருக்கிறார்.
PAD-ஆல் பாதிக்கப்பட்டுள்ள 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்: புற தமனி நோய் என்பது பிளேக்குகளின் படிவு காரணமாக, கைகள் மற்றும் கால்களின் தமனிகள் குறுகுவதை குறிக்கிறது. இது atherosclerosis-ன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும், கொழுப்பு படிவுகள் காரணமாக தமனிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள் மற்றும் கைகளுக்கான ரத்த ஓட்டம் போதுமான அளவு கிடைக்காமல் தடைபடுகிறது. காலின் கீழே அடிக்கடி மரத்து போவதால் ஏற்படும் உணர்வின்மை அல்லது ஜில்லென்று மாறுவது, கால்களில் பலவீனமான பல்ஸ், இடுப்பில் வலிமிகுந்த பிடிப்புகள், கால்களில் தோலின் நிறம் மாறுதல், ஆண்களில் விறைப்புத்தன்மை மற்றும் கால்களில் முடி உதிர்தல் உள்ளிட்ட பல PAD-யின் அறிகுறிகளாக உள்ளன.
ஆய்வில் பங்கேற்க வைக்கப்பட்ட 650,000-க்கும் மேற்பட்டவர்கள் : 2 பகுதிகளாக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 650,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். முதல் கட்டத்தில் சுமார் 650,000 பங்கேற்பாளர்களில் PAD ஆபத்துடன், தூக்கத்தின் காலம் (sleep duration) மற்றும் பகல்நேர தூக்கம் (Daytime napping) ஆகியவற்றின் தொடர்பை புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இரண்டாம் கட்டத்தில், தொடர்புகளின் காரணத்தை ஆய்வு செய்ய மெண்டலியன் ரேண்டமைசேஷன் எனப்படும் இயற்கையான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை செய்ய ஆய்வாளர்கள் மரபணு தகவலை (Genetic information) பயன்படுத்தினர்.
அபாயத்தை இரட்டிப்பாக்கும் 5 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் : 5 மணி நேரத்திற்கும் குறைவான இரவு தூக்கம் PAD-ஐ உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று முடிவுகள் காட்டுவதாக ஆய்வு ஆசிரியர் டாக்டர் யுவான் கூறி உள்ளார். மேலும் PAD இருப்பது போதுமான தூக்கம் வராமல் போகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் பரிந்துரைக்கப்பட்ட நேரம் இரவு தூங்காத சுமார் 53,416 பேருக்கு PAD ஆபத்து அதிகரித்திருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
தூக்கமின்மைக்கு என்ன காரணம் ? சில உடல்நல நிலைமைகள் இருப்பதன் காரணமாக சிலர் தங்களது தூக்கத்தை இழக்கின்றனர். என்றாலும் தற்போது பெரும்பாலானோரின் இரவு தூக்க நேரம் குறைந்ததற்கு எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ்களின் அதிகப்படியான பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து பிரவுஸ் செய்வது, வெகுநேரம் வரை வேலை செய்வது, காலையில் வெகுநேரம் வரை தூங்குவது பலரின் இயல்பான வழக்கமாக மாறி விட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளபடி, குறைவான தூக்கம் மற்றும் இரவு தாமதமாக தூங்கும் பழக்கம் உள்ளிட்டவை உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
நீண்ட நேரம் தூங்கினால் PAD-ஐ தவிர்க்க முடியுமா.! நீண்ட தூக்கம் குறித்த ஆய்வு முடிவுகளை பார்க்கும் போது 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவதும் கூட PAD ஏற்படும் ஆபத்தை சுமார் 24% அதிகரிப்பதாக தெரிகிறது. எனவே இரவில் சரியான நேரத்தில் தூங்க செல்வது ஆற்றும் போதுமான நேரம் தூங்கி காலை சரியான நேரத்தில் கண்விழிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பகல்நேரத்தில் தூங்காதவர்களுடன் ஒப்பிடும் போது பகலில் தூங்குபவர்களுக்கு PAD ஆபத்து 32% அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.
போதுமான அளவு தூங்குவதற்கு என்ன செய்வது.! நீங்கள் ஒரு நாளைக்கு 7 - 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்ய தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் கேஜெட்ஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு முடிப்பது மற்றும் ஒளி மற்றும் ஒலி போன்ற கவனச்சிதறல்களை தவிர்ப்பது உள்ளிட்ட பழக்கங்களை வளர்த்து கொள்ளுங்கள். அதே போல தூங்குவதற்கு முன் புத்தகம் படிக்க அல்லது தியானத்தில் ஈடுபட முயற்சிக்கவும். மாலை 6 மணிக்கு பிறகு டீ அல்லது காஃபி குடிக்க வேண்டாம்.