குழந்தைப்பிறப்பு என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் ஒரு பெண்ணுக்கு பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகும். குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டது, குழந்தை பெற்ற பெண்ணும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். அதில் முக்கியமானது, சுற்றி இருப்பவர்களின் கேள்விகள்! ஏற்கனவே ஒன்பது மாத கர்ப்பம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அதன் பிறகு பிரசவம், குழந்தை வளர்ப்பு என்று குழந்தை பெற்ற பெண்ணின் உடலும் மனமும் சோர்வாக இருக்கும். இந்த நிலையில் அக்கறையாக இருக்கிறேன் அப்பெண்ணிடம் ஒரு சில கேள்விகளை எல்லாம் கேட்கவே கூடாது.
குழந்தைக்கு சரியாக பால் கொடுப்பதில்லையா : தாய்ப்பால் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. குழந்தை பிறந்த பிறகு தீவிரமான சோர்வுக்கு ஆளாகும் பெண்களுக்கு, சில நாட்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்ப கொடுப்பது அசௌகரியமாகத்தான் இருக்கும். ஒரு சில பெண்களுக்கு குழந்தைக்கு, தேவைப்படும் அளவுக்கு தாய்ப்பால் சுரக்காமல் போகும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லையா, தாய்ப்பால் போதவில்லையா என்பது போன்ற கேள்விகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான உணவுகளை வழங்குங்கள். அதே நேரத்தில் அவர்கள் உணவு கட்டுப்பாட்டில் ஏதேனும் இருக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொண்டு அவர்களுக்கான உணவுகளை சமைத்து கொடுக்கலாம்.
வேலைக்கு போவது பற்றிய கேள்விகள் : குழந்தை பிறந்த ஒருசில மாதங்களிலேயே வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களை, சமூகம் கேலி செய்கிறது. குழந்தையை விட்டுவிட்டு எவ்வாறு வேலைக்கு வருகிறாய் என்று பொறுப்பில்லாத அம்மாவாக சித்தரிக்கிறது. குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விடும் பெண்களை பாராட்டுகிறது. வீட்டிலேயே இருக்கும் அம்மாவாக இருந்தாலும், சரி வேலைக்கு செல்லும் அம்மாவாக இருந்தாலும், பிசினஸ் செய்யும் அம்மாவாக இருந்தாலும் சரி, எல்லா பெண்களுமே ஒரே மாதிரிதான். இதில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது! எனவே வேலைக்கு செல்ல போகிறார்களா இல்லையா என்பது பெண்களின் முடிவு. அதைப்பற்றி குழந்தை பிறந்த உடனேயே கேட்டு அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.
அடுத்த குழந்தை எப்போது அல்லது எத்தனை குழந்தை பெறப் போகிறாய் : குழந்தைப் பிறப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பது அனைவருக்குமே தெரியும். நார்மல் டெலிவரியாக இருந்தாலும் சரி சிசேரியன் டெலிவரியாக இருந்தாலும் சரி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்கள் பலவிதமான போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள். எனவே ஒரு பெண் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார் அல்லது ஒரு குழந்தை மட்டும் போதும் என்று நினைக்கிறார் என்பது அந்த பெண்ணின், தனிப்பட்ட விஷயம். அது மட்டுமல்லாமல், குழந்தை பிறந்த பிறகு தன் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய அம்மாக்கள் நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்களிடம் மற்ற குழந்தையை அல்லது இன்னொரு குழந்தையைப் பற்றி பேசாதீர்கள்.
குழந்தை தூங்கும் போதே நீயும் தூங்குவாயா? : குழந்தை பிறந்த சில வாரங்கள் முதல் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு மாதங்கள் வரை அம்மாக்களுக்கு தூக்கம் என்பது எப்போது கிடைக்கும் என்றே தெரியாது. பொதுவாகவே குழந்தைகள் தூங்கும் போது அம்மாக்கள் தூங்கி கொள்ள வேண்டும் என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு நிச்சயமாக செய்ய முடியாது. குழந்தைகள் இரவெல்லாம் விழித்திருந்து பகலெல்லாம் தூங்கும். அம்மாக்களுக்கு அது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. குழந்தை தூங்கும் போது தான் அம்மாக்கள் தங்களுடைய வேலைகளையும் செய்ய முடியும். எனவே குழந்தை தூங்கும்போது நீயும் தூங்கு என்று என்று அவர்களை காயப்படுத்தும் கேள்விகளை கேட்க வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால், அதை நீங்கள் வாங்கி வந்து கொடுக்கலாம், குழந்தையை பார்த்துக்கொள்ளலாம், அவர்கள் ஓய்வெடுக்க உதவலாம்.
எப்போது எடை குறைக்கப் போகிறாய்? : கர்ப்ப காலத்தில் படங்களுக்கு 5 கிலோ முதல் 20 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அந்த எடை ஐஸ்கட்டி போல உருகிடாது. அது மட்டுமல்லாமல் கர்ப்பமாவதற்கு முன்பு இருந்த உடல் அமைப்பு பெறுவது மிக மிக கடினம். குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடல் முழுவதுமாக மாறிவிடும், ஹார்மோன்கள் சீராவதற்கு பல மாதங்கள் தேவைப்படும். எனவே குழந்தை பெற்ற பெண்களுக்கு எடை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.