கொரோனா வைரஸ் மக்களிடையே பீதியையும் , பதட்டத்தையும் அதிகரிப்பதால் பலரும் இதய நோயால் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிறது. இந்த சமயத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே இதற்காக முதலில் நாம் செய்ய வேண்டியது உடல் எடையை அதிகரிக்கமல் பார்த்துக்கொள்வதுதான். ஏனெனில் உடல் எடை அதிகரிப்புதான் இதய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக ஆய்வுகள் சொல்கின்றன. அதோடு உயர் இரத்த அழுத்தம், சில புற்றுநோய் வகைகளையும் நாம் பெற வேண்டியது இருக்கும். எனவே இன்றிலிருந்து இந்த விஷயங்களை கடைபிடிக்கத் தொடங்குங்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.
கிரீன் டீ : கிரீன் டீ தற்போது பலரும் குடிக்கத் தொடங்கியுள்ளனர். இது உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமன்றி இதய பாதிப்புகளை உண்டாக்கும் பிரச்னைகளிலிருந்தும் எதிர்த்து போராட உதவுகிறது. சுகாதார ஆய்வுகளிலும் கிரீன் டீ குடிப்பது டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய பாதிப்புகளின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் : மஞ்சளின் நன்மைகளை பலரும் அறிந்திருக்கக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பது மட்டுமன்றி இதயத்தை பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. கர்குமின் என்னும் பண்பானது நோய் எதிர்ப்பு அழற்சி மற்றும் புற்றுநோய் செல்களை தாக்கும் குணம் கொண்டது. நோய் எதிர்ப்பு அழற்சியானத் இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அழற்சி நோய்களை கட்டுப்படுத்துகிறது.
குடைமிளகாய் : குடைமிளகாய் பலருடைய ஃபெவரெட்டாக இருக்கிறது. இதிலும் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. மன அழுத்தத்தை போக்கி, இதய தசைகளை வலுபெற செய்கிறது. உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.