வயது, பாலினம் அல்லது என்ன வேலை செய்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய விஷயமாக மன அழுத்தம் இருக்கிறது. தற்போதைய வேகமான உலகில் அதிக மன அழுத்தத்தை உணருவது பொதுவானது. எனினும் இதை நிர்வகிக்க பல எளிய வழிகள் உள்ளன. போதுமான தூக்கம் முதல் சுய-கவனிப்பு பயிற்சி வரை பல விஷயங்கள் மன அழுத்தத்தை குறைக்க மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவும். மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும் வழிகளை கீழே பார்க்கலாம்.
போதுமான அளவு தூங்குங்கள் : உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயங்களில் ஒன்று போதுமான அளவு தூங்குவது. ஏனென்றால் தூக்கமின்மை ஒட்டுமொத்தமாக உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்குவதோடு மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படும். எனவே தினசரி இரவு 7 - 8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்யவும்.
தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்: மன அழுத்தத்திற்கு மற்றொரு சிறந்த நிவாரணி தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வது. இந்த பழக்கம் உடல் மற்றும் மன ரீதியாக நன்றாக உணர உதவும். தினசரி ஒர்கவுட்ஸ்களில் ஃபீல்-குட் ஹார்மோனான Endorphins-களை வெளியிட உதவுகிறது. ரன்னிங், ஸ்விம்மிங், யோகா அல்லது டான்ஸ் என எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஏதுவான ஒரு உடற்பயிற்சி முறையை கண்டறிந்து தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் பிசிக்கல் ஆக்டிவிட்டிஸ்களில் ஈடுபடுங்கள்.
மைன்ட்ஃபுல்னஸ் பயிற்சி : மைன்ட்ஃபுல்னஸ் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது ஆகும். இந்த பயிற்சியின் போது ஒருவர் தற்போதைய தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டம், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது கவனத்தை குவிக்கும் பயிற்சி ஆகும். இதில் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் உடல் உணர்வுகளை அமைதியாக ஏற்று கொள்வது ஒரு சிகிச்சை நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பதற்றம் மற்றும் கவலைகளை குறைப்பதற்கும், பொது நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.
ஆரோக்கியமான உணவு : உங்கள் உடல் சரியாகச் செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை உணவுகள் மூலம் எடுத்து கொள்வது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். எனவே உங்கள் டயட்டில் முழு தானியங்கள், லீன் ப்ரோட்டீன் , பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான உணவுகளை சேர்க்கவும். கவலை மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
பிடித்தவர்களுடன் தொடர்பில் இருங்கள் : உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் அதனை குறைக்க உங்களுக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி பேசி தொடர்பில் இருப்பது அவசியம். ஏனென்றால் அவர்கள் உங்கள் மனஅழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியாக இருக்க உதவுவார்கள். வாய்ஸ் அல்லது வீடியோ கால் மூலமோ அல்லது நேரில் சென்று சந்திப்பதன் மூலமோ உங்களது அன்புக்குரியவர்களுடன் பேசி மகிழ நேரம் ஒதுக்குங்கள்.
யதார்த்த இலக்குகள் : உங்களால் முடியக்கூடிய யதார்த்தமான இலக்குகளை அடைய முயற்சிப்பது உங்களுக்கு சாதனை உணர்வை கொடுப்பதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். நீங்கள் திட்டமிடும் இலக்கு அதிக லட்சியமுள்ளது என்றால் நீங்கள் செய்ய கூடிய அளவிற்கு சிறுசிறு படிகளாகப் பிரித்து செய்து முன்னேறும் போது உங்கள் சாதனைகளை நீங்களே அங்கீகரித்து மகிழ்ச்சியடையவும்.
சுய கவனிப்பு : மன அழுத்தத்தை நிர்வகிக்க சுய-கவனிப்பு முக்கியமானது. புத்தகம் படிப்பது, நீண்ட நேரம் குளிப்பது போன்ற எதுவாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்தமான செயலில் ஈடுப உங்களுக்காக நீங்களே சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிந்து உங்கள் அன்றாட வழக்கத்தில் அவற்றை சேர்க்கவும். நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் நேரங்களில் பொறுமையாக, அன்பாக இருக்க நினைவில் கொள்ளுங்கள். இது மனஅழுத்தத்தை சமாளிக்க உதவும்.