உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய ஏராளமான பரிசோதனைகளை செய்தாக வேண்டியிருக்கும். ஆனால், சில பாதிப்புகளை வெளியில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக தோலின் நிறம், முடியின் வளர்ச்சி, நகங்கள் ஆகியவற்றை கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிய முடியும். அந்த வகையில் உங்களின் நகத்தில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு உடலில் உள்ள பாதிப்புகளை எப்படி அறிவது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பிறை நிலா :நகத்தின் அடிப்பகுதியில் பிறை நிலா போன்று இருக்கும் தோற்றத்தை வைத்து உடலின் ஆரோக்கியத்தை அறிய முடியும். நகத்தின் அடியில் பிறை நிலா போன்று இல்லையென்றால் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளது என்று அர்த்தம். மேலும் உங்கள் நகங்கள் இருக்கும் பகுதியில் சிவந்து இருந்தாலோ, அல்லது உங்களுக்கு தலை சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மங்கிய அல்லது மஞ்சள் நிறம் :ஆரோக்கியமான நகங்கள் மென்மையாகவும் லேசாக சிவந்தும் இருக்கும். அதே போன்று சிராய்ப்புகள் எதுவும் இருக்காது. ஆனால் இதுவே நகத்தில் மங்கிய நிறத்தில் இருந்தால் உங்களின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தில் ஏதோ பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். மேலும் இரத்தசோகை, கல்லீரல் பாதிப்புகள், ஊட்டசத்து குறைபாடு அல்லது இதய பாதிப்புகள் இருக்கலாம். இதுவே உங்கள் நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தைராய்டு பிரச்சனை, நுரையீரல் நோய், சர்க்கரை நோய், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது சோரியாசிஸ் போன்ற பாதிப்புகள் இருக்க கூடும்.
கோடு விழுதல் :சிலருக்கு நகத்தில் நேராக கோடு விழுந்திருக்கும். இதை வைத்து சிறுநீரகம் மற்றும் எலும்புகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளது என்பதை அறியலாம். மேலும் இது போன்ற கோடுகள் சோரியாசிஸ் மற்றும் மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு உண்டாகும். நகத்தில் நேராக கோடு இருந்து, நகம் பார்ப்பதற்கு மங்கலாக இருந்தால் இரத்தசோகை என்று அர்த்தம்.
நகம் உடைதல் :பொதுவாக நகங்கள் வறட்சியாக இருந்தால் எளிதில் எளிதில் உடைந்து விடும். நீண்ட காலமாக தைராயிட் பிரச்சனைக்கு மருத்துவம் எடுத்துகொள்ளாதவர்களுக்கு இது போன்ற அடிக்கடி நகம் உடைதல் ஏற்படும். சிலருக்கு நகத்தில் விரிசல் போன்று இருக்கும்; இப்படி இதற்கு காரணம் பூஞ்சை தொற்று தான். அதிகமாக நெயில் பாலிஷ் மற்றும் பல கெமிக்கல்களை நகங்களுக்கு பயன்படுத்துவோருக்கு நகம் எளிதில் உடைந்து போகும்.
வெள்ளை திட்டுக்கள் :நகத்தில் வெள்ளையாக திட்டுக்கள் போன்று தோன்றினால் ஜிங்க் மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்பட்டிருக்கும். எனவே இது போன்று இருந்தால் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தாலே விரைவில் சரியாகி விடும். மேலும் நீண்ட காலமாக நகத்தில் இது போன்று இருந்தால் அலர்ஜி அல்லது பூஞ்சை தொற்றாக கூட இருக்கலாம்.
கருப்பு கோடுகள் :நகத்தில் கருப்பாக கோடுகள் போன்று இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக நகத்தில் காயங்கள் ஏற்பட்டால் இது போன்று இருக்கும். காயங்கள் எதுவும் நகத்தில் ஏற்படாமல் திடீரென்று இது போன்று கருப்பாக தோன்றினால் மெலனோமா என்கிற ஒருவகை புற்றுநோயாக கூட இருக்கலாம். எனவே நீண்ட நாட்களாக நகத்தில் கருப்பாக இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம்.