இருப்பினும் மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் சிலருக்கு இருக்கும் இந்த குழப்பத்தை சரி செய்வதும் அவசியம். எனவே மாரடைப்பிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உண்டா? அதோடு மயோர்கார்டிடிஸ் நோய் என்றால் என்ன என்பன போன்ற பல விஷயகளை தெரிந்துகொள்ளலாம்.
இதயத்தில் இறுக்கம், வீக்கம், அழற்சி பாதிப்புதான் மயோர்கார்டிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது Pfizer-BioNTech என்ற கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்களிடையே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என மருத்துவர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு மயோர்கார்டிடிஸ் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதுவும் 30 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்களையே பாதித்துள்ளது.
சி.டி.சியின் நோய்த்தடுப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் டாக்டர் டாம் ஷிமாபுகுரோவின் கூற்றுப்படி, 30 வயதிற்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு 226 பேருக்கு மயோர்கார்டிடிஸ் அல்லது பெரிகார்டிடிஸ் வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசி போட்ட பிறகுதான் இந்த பாதிப்பு உண்டாகிறதா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோய் அரிதானது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர்களின் உடல்நலம் நன்கு தேறி வருவதாகவும் சி.டி.சி கூறியுள்ளது.
மயோர்கார்டிடிஸ் : மயோர்கார்டிடிஸ் என்பது இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும் நோய் அறிகுறியாகும். இது இதய தசைகளின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. வீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வினை ஆற்றுவதால் நிகழ்கிறது. இது இதயத்தின் பலவீனத்திற்கும் வீக்கத்திற்கும் வழிவகுக்கிறது. இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் பம்ப் செய்யும் உங்கள் இதயத்தின் திறனைக் குறைக்கிறது. இதனால் விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பை (arrhythmias) ஏற்படுத்துகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், மயோர்கார்டிடிஸ் இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும்.
இதனால் யாருக்கு பாதிப்பு அதிகம் ? : மயோர்கார்டிடிஸ் பற்றி ஆய்வு செய்யும் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த நோய் இளைஞர்கள் முதல் குழந்தைகள் மற்றும் பதின் பருவ பிள்ளைகள் வரை எவரையும் பாதிக்கும். இருப்பினும், இதனால் அதிக ஆபத்தில் உள்ளவர்கள், 30 களின் முற்பகுதியில் பருவ வயதை அடைந்தவர்கள். பெண்களை விட ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.டி.சி படி, கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் ஆண்களிடையே இந்த பாதிப்பு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. "பெரும்பாலான பாதிப்புகள் லேசானதாகத் தோன்றுகின்றன. இருப்பினும் இதன் காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சி.டி.சி பத்திரிகைகளுக்குத் தெரிவித்துள்ளன.
மயோர்கார்டிடிஸ் அறிகுறிகள் என்ன? : மயோர்கார்டிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மார்பு வலி, சோர்வு, தலைச்சுற்றல், கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் இதயத்தில் இறுக்கம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான நோயாளிகள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் லேசான அறிகுறிகளையே கொண்டுள்ளனர். ஆரம்பகால நோயறிதல் தீவிர பாதிப்பை தடுக்க உதவுகிறது.