குறிப்பாக இன்றைய நிலையில் அலுவலகங்கள் பலவற்றிலும் நீண்ட நேரத்திற்கு ஒரே இருக்கையில் ஒரே நிலையில் அமர்ந்து கொண்டு பலரும் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு எந்த வித உடல் இயக்கங்களும் இல்லாமல் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் உண்டாகும் பிரச்சினைகளுக்கு “சிட்டிங் டிசீஸ்” என்ற பெயரே கொடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு பலரும் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் உண்டாகும் பிரச்சினைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
ஆயுள் குறையும் : நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் நமது ஆயுள் குறையும் அபாயம் உள்ளது. அது எப்படி உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் குறையும் என்று நீங்கள் கேட்கலாம். நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடுகள் உண்டாகும். மேலும் இதய கோளாறுகள், புற்று நோய், நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் இவ்வாறு ஏற்படும் உடல் உபாதைகளினால் இயற்கையாகவே மனநலையிலும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இவை தினசரி இயல்பு வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்கி மன அழுத்தம் மற்றும் கவலைகளுக்கு ஒருவரை உட்படுத்தி அவரின் ஆயுள் குறைவதற்கு காரணமாகிறது.
உடல் எடை கூடும் : சமீபத்திய அறிக்கைகளின் படி நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் நமது உடல் எடை கூடும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கும்போது லிப்போபுரோட்டின் லிபாஸ் எனப்படும் மாலிக்யூள்கள் உடலில் உருவாவது தடுக்கப்பட்டு, அவை உடல் எடை கூடுவதற்கு வழி வகுக்கின்றன. மேலும் இவை உடல் பருமன் அதிகரிப்பதற்கும் வழிவகை செய்கின்றன.
சோர்வாக உணர்தல் : நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் நீண்ட நேரத்திற்கு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாலும் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். இது மிக அதிகமாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதால் உண்டாகும் ஒரு பக்க விளைவு போன்றதாகும். தினசரி ஒரு விதமான வேலையை செய்து கொண்டு 8 மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் இவை மனதளவில் ஒரு வெறுமையை உண்டாக்கி விடுகின்றன. இதன் காரணமாகவே சோர்வான ஒரு மனநிலை நமக்கு உருவாகிறது.
உடல் தோரணையில் மாற்றம் : நீண்ட நேரம் அலுவலக இருக்கையிலோ அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும்போதோ அவை நமது உடல் தோரணையில் மாறுதல்களை உண்டாக்குகின்றன. மேலும் நாம் அலுவலக இருக்கையில் அமரும்போது சரியான ஒரு உடல் தோரணையில் அமர்ந்து நமது உடலை இலகுவாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம்சீரற்ற உடல் தோரணையால் நமது உடலில் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் வலியை நம்மால் சரி செய்ய முடியும். மேலும் சீரற்ற உடல் தோரணையில் நீண்ட நேரம் அமைந்திருக்கும் போது, இவை நமது முதுகுத்தண்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அந்த பகுதியில் சரி செய்ய முடியாத பாதிப்புகளை உண்டாக்கிவிடலாம்.
முதுகு வலி : இது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் நமது முதுகு பகுதியில் இருக்கும் தசைகள் மற்றும் நரம்புகளில் அதிக அழுத்தம் செலுத்தப்பட்டு அவை வலியை உண்டாக்கும். மேலும் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு கணினியில் வேலை செய்வதால் அவை கழுத்து பகுதிகளிலும் வலியை உண்டாக்குகின்றன.