அப்படியான திட்டம் எதையும் நீங்கள் வகுக்கவில்லை அலல்து மாற்றங்கள் செய்யவில்லை என்றால் உடல் எடையை குறைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கும். எடை மேலாண்மையில் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது, காலை பழக்கங்கள் போன்றவை அடங்கிய சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் எடை குறைப்பு செயல்முறையை விரைவுபடுத்த உதவலாம். அதிகாலையில் எழுவது ( 5 - 6 மணிக்குள்) மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற தினசரி தொடர் காலை பழக்கவழக்கங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. உடல் எடையை சீரான முறையில் குறைக்க உதவும் நிபுணர்களின் பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்...
சீக்கிரம் எழுவது: அதிகாலை அல்லது காலை சீக்கிரம் எழுவது எடையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. காலை சீக்கிரம் எழ சீக்கிரம் தூங்க வேண்டும் என்பதை மறவாதீர்கள். இதன் மூலம் எடை இழப்புக்கு அவசியமான உங்கள் தூக்க சுழற்சி ஒழுங்குபடுகிறது. சுமார் 8 மணிநேர தூக்கத்திலிருந்து எழும் நேரத்தில், உங்கள் வளர்சிதை மாற்றம் அன்றைய நாளுக்கு முன்பே தயாராகிவிடும். அதிகாலை எழுவது உங்கள் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்யவும், காலை உணவை சாப்பிட மற்றும் முக்கியமான வேலைகளை முடிக்க போதுமான நேரத்தை வழங்குகிறது.
தியானம் செய்யுங்கள்: மன அமைதி மற்றும் நினைவாற்றலுக்கு பயிற்சி செய்வதை விட உங்கள் நாளைத் தொடங்க சிறந்த வழி எதுவுமில்லை. தினமும் காலை 10-15 நிமிடங்கள் தியானம் செய்வது, உங்கள் மனதை அமைதிப்படுத்தி அன்றைய நாளுக்கு உங்களை தயார்படுத்துகிறது.உங்கள் உள் ஆற்றலை அதிக உற்பத்தித்திறன் மற்றும் நேர்மறையான விளைவுகளை நோக்கி செலுத்த தியானம் உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது தியானம்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்: காலை எழுந்து பல் தேய்த்து விட்டு முதல் வேலையாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமான அமைப்பை நன்றாக செயல்பட வைக்கிறது. இப்பழக்கம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீர் மூக்கடைப்பை போக்கவும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் கொழுப்பை மூலக்கூறுகளாக உடைக்கிறது, செரிமான அமைப்பு அதை எரிப்பதை எளிதாக்குகிறது.
காலை உணவில் அதிக புரதம்: காலை உணவு என்பது நாளின் துவக்கத்தில் சாப்பிடப்படுவதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எடை இழப்பு பயணத்தில் உள்ளோர் அதிக புரதச்சத்து நிறைந்த காலை உணவை அவசியம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இப்பழக்கம் ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது, கடுமையான உடற்பயிற்சி செய்ய உதவுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மொத்தத்தில் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலையில் உடற்பயிற்சி: மாலையில் செய்யும் உடற்பயிற்சிகளை விட காலை நேரத்தில் செய்யப்படும் பயிற்சிகள் சிறந்த பலனை தருகின்றன. ஏனென்றால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் அதிக கொழுப்பு எரிகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது, நீங்கள் சாப்பிட்ட உணவை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் உடல் ஏற்கனவே இருக்கும் கொழுப்புகளை எரிபொருளாக பயன்படுத்துகிறது. இதனால் எளிதில் எடை குறையும். மேலும் காலை உடற்பயிற்சிகள் தூக்க சுழற்சியை மேம்படுத்தும். காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, உங்கள் பயிற்சி வழக்கத்தை தவறால் செய்ய உதவுகிறது.