கொரோனா வைரஸால் உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் போதாது என்று மங்கி பாக்ஸ் என்ற புதுவகை வைரஸ் நோய் இங்கிலாந்தில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 7ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நைஜீரியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த நபர் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர் இங்கிலாந்தில் இருந்து செல்வதற்கு முன்பாகவே தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது, அந்த நோயாளி செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மங்கிபாக்ஸ் என்றால் என்ன?
1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது
இந்நோய் 1980களில் முற்றிலும் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மங்கி பாக்ஸானது காங்கோ பேசின் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க கிளேட்ஸ் என இரண்டு மரபணு வகைகளை கொண்டுள்ளது, இதில் காங்கோ பேசின் மிகவும் வீரியம் மிக்கது மற்றும் வேகமாக பரவக்கூடியது.
மங்கிபாக்ஸ் பரவியுள்ள விவரங்கள்:
1996-97 ஆம் ஆண்டில் காங்கோவில் மங்கி பாக்ஸ் கிளஸ்டர் வெடித்ததாகவும், தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் உயிரிழப்பு குறைவாகவே இருந்ததாகவும் உலக சுகாதார மையம் பதிவு செய்துள்ளது. ஆப்பிரிக்காவிற்கு வெளியே முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் மங்கிபாக்ஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டது.40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு நைஜீரியாவில் மிகப்பெரிய பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2018ம் ஆண்டு இஸ்ரேலிலும், செப்டம்பர் 2018 மற்றும் டிசம்பர் 2019 லண்டனிலும், மே 2019ம் ஆண்டு சிங்கப்பூரிலும் கண்டறியப்பட்டது.
மங்கிபாக்ஸ் அறிகுறிகள்:
காய்ச்சல், தடுப்பு, தீவிர தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு மற்றும் கணுக்கால் வீக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கட்டிகள் போன்ற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் WHO தெரிவித்திருக்கிறது. மேலும் தடிப்புகள் முகம், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது. மேலும் வாய்வழி, கண்கள் மற்றும் பிறப்புறுப்புகள் வழியாக அடர்த்தியான சளி போன்ற திரவம் வெளிப்படுவதாகவும் கூறியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 6 - 13 நாட்கள் வரையும், சிலருக்கு 5-21 நாட்கள் வரையும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் WHO தெரிவித்திருக்கிறது.
மங்கிபாக்ஸ் எவ்வாறு பரவுகிறது?
வன விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் மங்கிபாக்ஸ் நோயானது, பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து ஆரோக்கியமான மனிதனுக்கும், அவர்களுடைய காயங்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆராய்ச்சி முடிவுகளின் படி, "பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடித்தல் அல்லது கீறல்கள் அல்லது பாதிக்கப்பட்ட பொருட்களை கையாளும் போது அல்லது சுவாசம் அல்லது மியூகோசல் வழிகள் வழியாக நோய்த்தொற்று பரவலாம்” எனக் கண்டறியப்பட்டுள்ளது.