பூமியில் வாழும் உயிர்களிடம் இருந்து மனிதனை உணர்ச்சிகள் தான் வேறுபடுத்திக் காட்டுகின்றன. சோகம், அழுகை, சிரிப்பு போன்ற சில உணர்வுகளை வெளிக்காட்டும் அம்சங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. அதேபோல் மன அழுத்தம், வேலைப்பளு, உறவுச் சிக்கல் போன்ற காரணங்களால் உணர்வு ரீதியாகக் காயப்படுவது உண்டு. ‘வாழ்க்கையில் எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கிறது. அதக்கு என்ன செய்யலாம்’ எனச் சொல்லிவிட்டு பொதுவாக நழுவிச் செல்லும் விஷயம் இது கிடையாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களில் எமோஷனலாக பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றுவது அவசியமானது. அதற்கு முதலில் நீங்கள், அப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காண வேண்டும். எனவே உணர்வு ரீதியாகக் காயம்பட்டவர்களை அடையாளம் காண்பது எப்படி என அறிந்துகொள்வது எனப் பார்க்கலாம்.
தனிமை விரும்பிகள்:உணர்ச்சி ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். சுற்றியிருக்கும் நண்பர்கள், மனிதர்கள் ஆகியோரை எல்லாம் ஒதுக்கி விட்டு ‘தனியே தன்னந்தனியே’ நேரத்தைச் செலவிடவே விரும்புவார்கள். பெரிதாக அவர்களுக்கு என எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனாலும் எதையோ பறிகொடுத்து விட்டது போல் முகத்தை வைத்துக்கொண்டு பிறரிடம் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
உள்ளே அழுகை; வெளியே சிரிப்பு:எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை வைத்துக் கொண்டு அனைவர் முன்னாலும் தான் நன்றாக இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நபர்களில் பலரும் கண்ணாடி முன் நிற்கும் போது கண்ணீர் விட்டுக் கதறி அழ வேண்டும் என நினைக்கும் அளவிற்கு மனதிற்குள் ஆயிரம் விஷயங்களைப் பூட்டி வைத்திருப்பார்கள். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற எண்ணத்தில் மனதிற்குள் அனைத்து பிரச்சனைகளையும் பூட்டி வைக்கும் இப்படிப்பட்ட நபர்களுக்கு நிச்சயம் பிறரது உதவி தேவை.
மறக்கவோ, மன்னிக்கவோ தெரியாது:உணர்ச்சி ரீதியாகக் காயம்பட்ட நபர்களுக்கு அடுத்தவர்கள் செய்த சின்ன சின்ன தவறுகளைக் கூட மறக்கவோ, மன்னிக்கவோ தெரியாது. அப்படிப்பட்ட செயல்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் செய்த சின்ன தவறுகாக கூட அவர்களை முற்றிலும் வெறுக்கிறீர்கள், மன்னிக்க மறுக்கிறீர்கள் என்றால் உங்களிடம் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையைச் சுற்றியுள்ள நபர்களின் தவறுகளை மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் மனிதர்கள் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்.
மேலோங்கும் பாதுகாப்பின்மை:ஆரோக்கியமற்ற உணர்ச்சிகரமான சூழ்நிலையில் இருப்பதாக உணரும் நபர்கள், தாங்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணருவார்கள். பொதுவாக மனிதர்களுக்கு எதிர்காலம், வேலை, சம்பளம் போன்ற விஷயங்களில் எப்போதாவது ஒருமுறை பாதுகாப்பு இல்லாதது போல் உணர்வு ஏற்படுவது இயல்பானது. ஆனால் உணர்ச்சி ரீதியாகக் காயப்பட்டவர்கள், தாங்கள் பாதுகாப்பற்ற மோசமான நிலையில் இருப்பது போல் நினைத்துக்கொள்வார்கள்.
வாழ்க்கையை வாழத் தெரியாது:வாழ்க்கையைப் பிடித்தாற் போல் வாழ்வதை விட்டு விட்டு, தனிமையிலும், சோகத்திலும் நேரத்தை கடந்துவார்கள். இன்றைய காலகட்டத்தில் பணத்திற்காகப் பிடிக்காத வேலைகளில் பலரும் சிக்கியுள்ளனர். எதிர்கால தேவைக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான பணத்தைச் சம்பாதிக்கப் பிடிக்காத வேலையைச் செய்யும் நபர்கள், அலுவலக நேரம் முடிந்ததும் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். புத்தகம் படிப்பது, நடனமாடுவது, வண்ணம் தீட்டுவது, விளையாட்டு, சமையல் செய்வது போன்ற ஏதாவது ஒரு பிடித்தமான விஷயத்தில் கவனத்தைத் திருப்பலாம்.