ஆரோக்கியம் என்பது ஆண் பெண் பேதம் கொண்டது அல்ல. அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். உடலுக்கு நன்மைகளை வழங்க கூடிய உணவுகள், சீரான வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை பின்பற்றுவது அவசியம். பெண்களுடன் ஒப்பிடுகையில் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடலில் ஏற்படும் பல அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். அப்படியே அறிகுறிகளை உணர்ந்தாலும் கூட மருத்துவரிடம் சரியான சமயத்தில் செல்லாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.
அறிகுறிகள் இருந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாகவே இருப்பதை போல உணர்கிறார்கள். ஆனால் அறிகுறிகளை புறக்கணிப்பது ஒரு கட்டத்தில் உடலை கடுமையாக பாதிக்க கூடும். எனவே ஆண்கள் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டிய சில ஆபத்தான அறிகுறிகளை பார்க்கலாம். கீழ்காணும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஆண் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக முழு உடல்நல பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம்: சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட சிறுநீர் தொடர்பான எந்த ஒரு அறிகுறிகளும் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போவதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம். உதாரணமாக ரத்தம் கலந்த சிறுநீரை வெளியேற்றுவது சில மோசமான தொற்றின் அறிகுறியாக இருக்க கூடும். புரோஸ்டேட் கேன்சர் அல்லது கிட்னி ஸ்டோன் உள்ளிட்ட கோளாறுகளை தெரியப்படுத்த வெளிப்படும் அறிகுறிகளாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடிசிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஏற்படும் அசாதாரண உணர்வு சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீர் பாதை தொற்று, நீரிழிவு அல்லது சிறுநீரகங்கள் அல்லது இதயத்தில் பாதிப்பு இருப்பதை குறிக்கலாம்.
மார்பு வலி: பல காரணங்களால் மார்பு பகுதியில் வலி ஏற்படும் என்றாலும் திடீரென ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் சரியாக சுவாசிக்க முடியாமல் ஏற்படும் அவதி உள்ளிட்டவை இதய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்க கூடும். மார்பு மற்றும் தோள்பட்டை வலியுடன் திடீர் மாரடைப்பு தொடர்புடையது என்றாலும், அடிப்படை பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது இதய கோளாறுகளை உருவாக்கும் நபர்கள் இத்தகைய அறிகுறிகளை சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முன்பே அனுபவிக்கலாம். எனவே இது போன்ற அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மச்சம் அல்லது கட்டி: இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மிக முக்கியம். பிறப்புறுப்புகளில் திடீரென்று ஏற்படும் அசாதாரண மச்சம் அல்லது கட்டி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் புறக்கணிக்க கூடாது. ஆண்குறி அல்லது விதைப்பையை சுற்றி ஏற்படும் கட்டிகள் அல்லது மச்சங்களைப் பரிசோதிப்பது முக்கியம். ஏனென்றால் இவை புற்றுநோய்க்கு காரணமாக இருக்கலாம். இளம் ஆண்களிடையே காணப்படும் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகைகளில் டெஸ்டிகுலர் புற்றுநோய் ஒன்று என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விறைப்புத்தன்மை குறைபாடு: வயதுக்கு ஏற்ப ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை விறைப்புத்தன்மை குறைபாடு. ஆனால் விறைப்புத்தன்மை அல்லது உறவில் குறைவான நாட்டம் உள்ளிட்ட அறிகுறிகள் ஒரு அடிப்படை மருத்துவ நிலைக்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள், கட்டுப்பாடற்ற அல்லது கடுமையான நீரிழிவு, மது பழக்கம் உள்ளிட்டவை விறைப்பு குறைபாடு அல்லது பாலியல் செயல்திறனை பாதிக்கும் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வது அவசியம்.
அதிக தாகம்: பொதுவாக நாளொன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது பொதுவான நல்ல பழக்கம். ஆனால் சில நேரங்களில் அதீத தாகம் ஏற்படுவது, ஒரே நாளில் ஏராளமான தண்ணீரை குடிப்பது உள்ளிட்ட தாக்கம் சார்ந்த அறிகுறி நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலாக இருக்கும் ஹைப்பர் கிளைசீமியாவின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் சரியான நேரத்தில் நோயறிதல் செய்யப்பட்டால், நீரிழிவு நோயை நன்கு நிர்வகிக்க முடியும். எனவே இந்த அறிகுறியை புறக்கணிக்க கூடாது.