

அதிக எடை கொண்ட பெண்களில் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க மத்தியதரைக் கடல் உணவுகள் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதன் மூலம் மத்திய தரைக்கடல் உணவு நீரிழிவு நோயைக் குறைப்பதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு பலன்களைக் கொடுக்கும் என்பதற்கு கூடுதல் சான்றுகள் கிடைத்துள்ளன. ஏனெனில் அந்த உணவில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் உள்ளன.


நவம்பர் 19ம் தேதி அன்று ஜமா ஓபன் நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்படி, மகளிர் சுகாதார ஆய்வில் (WHS) பங்கேற்ற 25,000 பேரிடமிருந்து கடந்த 25 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட முடிவுகளில், மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றும் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 30% குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.


முடிவுகளின் உயிரியல் விளக்கத்தை வழங்க இன்சுலின் எதிர்ப்பு, உடல் நிறை குறியீட்டெண், லிப்போபுரோட்டீன், வீக்கம் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பயோமார்க்கர்களைப் பயன்படுத்தும் பெண்களை அவர்கள் ஆய்வு செய்தனர். 1992 மற்றும் 1995 க்கு இடையில் ஆய்வில் சேர்க்கப்பட்ட பெண்களிடமிருந்து இந்த ஆய்வு சேகரிக்கப்பட்டு, டிசம்பர் 2017 வரை தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது.


இந்த ஆய்வு இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தில் வைட்டமின் ஈ மற்றும் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் விளைவுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பங்கேற்பாளர்கள் உணவு உட்கொள்ளல், வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு, புள்ளிவிவரங்கள் மற்றும் பிறவற்றைப் பற்றிய உணவு அதிர்வெண் கேள்வித்தாள்களை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் மிதமான அளவு ஆல்கஹால் (தினசரி அரை முதல் ஒன்றரை பானங்களுக்கு இடையில்) உட்கொண்டனர். மேலும் சராசரியை விட குறைவான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை சாப்பிட்டனர்.


ஆய்வின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி WHS-ல் பங்கேற்ற 25,000 பேரில், 2,307 பங்கேற்பாளர்கள் வகை 2 நீரிழிவு நோயை கொண்டிருந்தனர். அதில் அதிக உடல் நிறை குறியீட்டெண் உள்ளவர்களில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்த மத்திய தரைக்கடல் உணவு உதவியது என்று அவர்கள் கண்டறிந்தனர். அதாவது 25க்கும் மேற்பட்ட பிஎம்ஐ கொண்ட பெண்களுக்கு இந்த உணவு முறை உதவியது.


இது குறித்து ப்ரிகாமின் தடுப்பு மருத்துவம் மற்றும் இருதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இணை பேராசிரியர் டாக்டர் சாமியா மோரா கூறுகையில், “ஒருவர் தனது உணவை மேம்படுத்துவதன் மூலம், குறிப்பாக அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் இதனை செய்யும் போது டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்தை அது குறைக்கும் என்ற கருத்தை ஆய்வு ஆதரிக்கிறது எனக் கூறினார். மேலும் மாற்றங்கள் உடனேயே நடக்காது என்றும் வளர்சிதை மாற்றம் ஒரு குறுகிய காலத்தில் மாறக்கூடும்.


எனவே பல தசாப்தங்களாக பாதுகாப்பை வழங்க நீண்ட கால மாற்றங்கள் தேவை என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார். மத்தியதரைக்கடல் உணவு இதய நோய், புற்றுநோய் மற்றும் பிற வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் போன்ற பிற நோய்களின் நீண்டகால ஆபத்தைத் தடுக்கிறது மற்றும் குறைக்கிறது. அந்த வகையில் ஒரு நபரின் உணவுத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்பது நிதர்சமான உண்மை.